AUS vs SA.. மார்ஸ்- ஷார்ட் ஜோடி சாதனை.. 14.5 ஓவரில் நொறுக்கியது ஆஸி.. குட்டி ஏபிடி சொதப்பல்.. தென் ஆப்பிரிக்கா தொடரை இழந்தது!

0
1760

ஆஸ்திரேலியா அணி இந்தியா வருவதற்கு முன்பாக, மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் இந்தச் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரராக வந்த டெம்பா பவுமா 17 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 35 ரன்கள் அதிரடியாக எடுத்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்றிக்ஸ் 3, ராஸி வாண்டர் டெசன் 6 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த குட்டி ஏபிடி டிவால்ட் பிரிவியஸ் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார்.

இதற்கு அடுத்து கேப்டன் எய்டன் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். தாக்குப்பிடித்து விளையாடிய எய்டன் மார்க்ரம் 38 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா 164 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சீன் அப்பாட் மற்றும் நாதன் எல்லீஸ் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டிராவீஸ் ஹெட் 17 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு மேல் தான் ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தில் சூடு பிடித்தது.

- Advertisement -

ட்ராவிஸ் ஹெட் ஆட்டம் இழந்ததும் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் மற்றும் கேப்டன் மிட்சல் மார்ஸ் இருவரும் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் சிதறடித்து, இலக்கை நோக்கி வெகுவேகமாக முன்னேறினார்கள்.

சிறப்பாக விளையாடிய மேத்யூ ஷார்ட் 30 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஷார்ட், மார்ஸ் ஜோடி இரண்டாவது விக்கட்டுக்கு 100 ரன் சேர்த்தது. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது விக்கெட்டுக்கு அதிக ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்த ஆஸ்திரேலிய ஜோடி என்ற சாதனையைப் படைத்தது.

இதற்கு அடுத்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட கேப்டன் மார்ஸ், இறுதி வரை களத்தில் நின்று 39 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலிய அணியை 14.5 ஓவரில் இலக்கை எட்ட வைத்து வெற்றி பெற வைத்தார். ஜோஸ் இங்கிலீஷ் இரண்டு ரன்கள் உடன் களத்தில் நின்றார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி இருக்கிறது!