AUS vs SA.. 3-2 ஆஸி பரிதாபம்.. தொடரைக் கைப்பற்றிய தெ. ஆ.. சொந்த மண்ணில் டிகாக் பிரியாவிடை !

0
11491
De kock

ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் இரண்டாம் பகுதியாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இந்த தொடரின் கடைசிப் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவது போட்டியில் மார்க்ரம் மற்றும் நான்காவது போட்டியில் கிளாசன் ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் வென்று தொடரை சமநிலைப்படுத்தியது தென்னாப்பிரிக்கா!

- Advertisement -

இந்த நிலையில் இன்று ஜோகனஸ்பர்க் மைதானத்தில் தொடரை நிர்ணயம் செய்யும், இறுதி மற்றும் ஐந்தாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த முறை பேட்டிங்கில் குயின்டன் டி காக் 27, ராஸி வான் டெர் டுசன் 30, மார்க்ரம் 93, டேவிட் மில்லர் 63, மார்க்கோ ஜான்சென் 47, பெலுவாக்கியோ 38 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய அணிக்கு டிராவிஸ் ஹெட் காயத்தால் இந்தப் போட்டியில் விளையாடாத காரணத்தினால் துவக்க வீரராக வந்த கேப்டன் மிட்சல் மார்ஸ் அதிரடியாக 56 பந்தில் 71 ரன்கள் சேர்த்தார். டேவிட் வார்னர் 10, ஜோஸ் இங்கிலீஷ் ரன் ஏதும் இல்லாமல், அலெக்ஸ் கேரி 2, டிம் டேவிட் 1, கேமரூன் கிரீன் 18 என்று வெளியேற ஆஸ்திரேலியா அணி நெருக்கடியில் விழுந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியால் நிமிரவே முடியவில்லை. 34.1 ஓவரில் 193 ரன்களுக்கு ஆட்டம் இழந்து, 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 எனக் கைப்பற்றியது.

பேட்டிங்கில் 47 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்கள் கைப்பற்றிய மார்க்கோ ஜான்சென் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணி முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி இருந்த நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை தோற்று, கடைசி மூன்று போட்டிகளை தொடர்ந்து வென்று தென் ஆப்பிரிக்கா தொடரை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது!

மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உலகக் கோப்பையோடு ஓய்வு பெற இருப்பதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குயின் டி காக் அறிவித்திருந்தார். அவருக்கு சொந்த மண்ணில் இது கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடைய கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாகவும் அமைந்திருக்கிறது!