189 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா! இது இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

0
1686

ஆஸ்திரேலியாவிடம் முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா அணி. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு சாதகமா? என்பதை விரிவாக பார்ப்போம்.

போட்டி சுருக்கம்

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் இரண்டாவது மற்றும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது.

தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டன் டீன் எல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக ரன் அவுட் ஆகி ஏமாற்றினார். இவர் 26 ரன்கள் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஏர்வி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டி புரைன்(12), டெம்பா பவுமா(1) ஜோண்டோ(5) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 67 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி தடுமாறியது.

அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த மார்க்கோ ஜான்சன் மற்றும் கைல் வேரிண்ணே இருவரும் அணியின் ஸ்கொரை 67ல் இருந்து 179 ரன்கள் வரை எடுத்து சென்றனர். ஆறாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 112 ரன்கள் சேர்த்தது.

வேரிண்ணே 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரே ஜான்சன் 59 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா பவுலர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு சுருண்டது.

ஐபிஎல் ஏலத்தில் 17.5 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணிக்கு எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஏற்கனவே தென்னாபிரிக்கா அணி முதல் டெஸ்ட் போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இழந்தது. தற்போது 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் குறைந்த ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது.

2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும். மேலும் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றிகள் சதவீதம் குறையும். இது இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும். தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பதற்கு உதவியாக அமையும்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியை தழுவினால், இந்திய அணி கிட்டத்தட்ட ஒரு காலை இறுதி போட்டிக்குள் வைத்து விடும் என்றே கூறலாம். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். ஒரு போட்டி டிராவல் முடிந்தாலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவது உறுதியாகிவிடும்.

இதற்கிடையில், இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரை குறைந்தபட்சம் 2-0 என கைப்பற்ற வேண்டும். இல்லையெனில் இவை அனைத்தும் தலைகீழாக மாறிவிடும்.