இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாவது நாளுக்குள் நுழைய இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் 140 ரன்கள் எடுக்க அந்த அணி 474 ரன்கள் குவித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு நிதீஷ் குமார் ரெட்டி 114 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள். இருவரும் சேர்ந்து ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 91 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகள் என்று தள்ளினார்கள்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்ஸ்டாஸ் 8, கவாஜா 21, ஸ்மித் 13, ஹெட் 1, மிட்சல் மார்ஸ் 0, அலெக்ஸ் கேரி 2 என வரிசையாக வெளியேற ஆஸ்திரேலியா அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது. இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் டே டெஸ்டில் வெல்வதற்கான வாய்ப்புகள் உருவானது.
ஆஸ்திரேலிய அணிக்கு கடினமான நேரத்தில் மூன்றாவது இடத்தில் வந்த லபுசேன் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். இவருடன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய கேப்டன் கம்மின்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் கடைசி விக்கெட்டுக்கு பிரச்சனையை தந்த லயன் ஆட்டம் இழக்காமல் 41 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருடன் போலன்ட் 10 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியா 5வது டெஸ்ட்.. ஆஸி முக்கிய வீரர் திடீர் வெளியேற்றம்.. 2வது நாளில் நடந்த சோகம்.. வெளியான தகவல்கள்
இவர்கள் இருவரும் கடைசி விக்கட்டுக்கு 110 பந்துகள் சந்தித்து ஆட்டம் இழக்காமல் 55 ரன் பாட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். இன்றைய நான்காவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 333 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணி தங்களுக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பை பந்துவீச்சில் தவறவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா 4, சிராஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.