தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. முதல் நாளிலேயே இங்கிலாந்து தனது வழக்கமான பாஸ்பால் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி இருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இன்று துவங்கிய இரண்டாவது போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி மூன்றாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக 59 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் வந்த துணை கேப்டன் ஒல்லி போப் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 167 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து வெளியேறினார். நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 14 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து இளம் அதிரடி வீரர் ஹாரி புரூக் அதிரடியாக 34 பந்தில் 36 ரன்கள், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 104 பந்தில் 69 ரன்கள், விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 54 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கடைசியில் கிறிஸ் வோக்ஸ் 48 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து அணி 88.3 ஓவர்களில் 416 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகள், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சினிகிளேயர் மற்றும் கெவிம் ஹாட்ஜ் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இன்றைய போட்டியில் சதம் அடித்த ஒல்லி போப்புக்கு இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணி கேட்ச் விட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : நான் செலக்ட்டாக காரணம் கம்பீர் பையாதான்.. அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தது இதைத்தான் – ஹர்ஷித் ராணா பேட்டி
மேலும் இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் ஒரு ஓவருக்கு 4.70 ரன்கள் வீதம் அடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஓவருக்கு ஐந்து ரன்கள் வீதம் இன்றைய நாள் முடிவில் 450 ரன்கள் எடுக்கும் நிலையில் இங்கிலாந்து ஒரு கட்டத்தில் இருந்தது. கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த காரணத்தினால் அந்த இலக்கை இங்கிலாந்து அணியால் எட்ட முடியாமல் போய்விட்டது. இல்லையென்றால் வெஸ்ட் இண்டீஸ் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்திருக்கும்!