ஏசியன் கேம்ஸ்.. கடைசி ஓவருக்கு 20 ரன்.. ஒரு பந்துக்கு 4 ரன்.. திக் திக் போட்டியில் பாகிஸ்தானை வென்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது பங்களாதேஷ்!

0
673
Bangladesh

தற்பொழுது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு கிரிக்கெட் அணிகளையும் டி20 வடிவத்தில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் தற்போது இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தங்கப் பதக்கத்திற்கு, 11 30 மணி அளவில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் அரை இறுதிக்கு வந்து தோற்ற பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது இடத்திற்கு வெண்கல பதக்கத்திற்கு மோதிக்கொண்டன. மழையின் காரணமாக ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டி தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 5 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்த பொழுது மழை வந்தது. பாகிஸ்தான் அணியின் தரப்பில் மிர்சா பேக் 18 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 32 ரன்கள் அடித்திருந்தார்.

இதற்குப் பிறகு வெகுநேரம் கழித்து மழை நின்ற பொழுது டக்வோர்த் லீவிஸ் விதிப்படி, அதே ஐந்து ஓவர்களுக்கு பங்களாதேஷ் அணி 65 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த ஜாகிர் ஹசன் 0, கேப்டன் சையப் ஹசன் 0 ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்கள். இந்த நிலையில் சர்வதேச அனுபவம் கொண்ட யாசிர் அலி அதிரடியாக விளையாடினார்.

இந்த நிலையில் கடைசி ஓவருக்கு 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற நிலை உருவானது. கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளை சந்தித்த யாசிர் அலி 6,2,6,2 என 16 ரன்கள் எடுத்து, ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற பரபரப்பான கட்டம் உருவானது. இந்தப் பந்தை சந்திக்க வந்த ரஹீபுல் ஹசன் மிட் விக்கெட் விசையில் பவுண்டரி அடித்து பங்களாதேஷ் அணியை வெல்ல வைத்து வெண்கல பதக்கத்தை பெற வைத்திருக்கிறார். கடைசியில் பாகிஸ்தான் அணிக்கு வெண்கல பதக்கமும் கிடைக்காமல் போனது!