“கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி” … ஆசியக் கோப்பை காண தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு !

0
902

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது ஆசிய கோப்பை ஆகும் . பிராந்திய அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஆசியக் கோப்பை முக்கிய இடம் வகிக்கிறது .

1984 ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை டி20 போட்டியாகவும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை 50 ஓவர் போட்டியாகவும் நடத்தப்பட்டு வருகிறது .

- Advertisement -

இதுவரை நடத்தப்பட்டுள்ள 15 ஆசியக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது . இதற்கு அடுத்தபடியாக இலங்கை அணி ஆறு முறையும் பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன . கடந்த முறையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை அணி வென்றது . அந்த அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது .

பதினாறாவது ஆசியக் கோப்பை காண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது . ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வந்ததால் இந்த வருடத்திற்கான ஆசிய கோப்பை நடக்கும் என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது . தற்போது இதற்கான தீர்வு கண்டிருக்கிறது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் . அதன்படி பதினாறாவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஹைபிரிட் முறையில் நடத்துவது என அனைத்து கிரிக்கெட் சங்கங்களும், ஒரு மனதாக தீர்மானித்திருக்கின்றன .

இதன் அடிப்படையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டி தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளன. இவற்றில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்திருக்கிறது .

- Advertisement -

இந்தப் போட்டி தொடரில் இந்தியா பாகிஸ்தான், ஸ்ரீலங்கா பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபால் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன . லீக் முறையில் நடைபெறும் போட்டிகளில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன . ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெரும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் .

இந்தப் போட்டி நடத்துவதற்கான உரிமம் முதலில் பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்டிருந்தது . ஆனால் இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுத்ததால் ஹைபிரிட் முறையில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை வழங்கியது. இந்த ஆலோசனைக்கு மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் சம்மதம் தெரிவித்ததால் தற்போது ஆசிய கோப்பை நடைபெறுவது உறுதியாக இருக்கிறது .

மேலும் இந்த போட்டி தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஆசிய கோப்பை போட்டிகள் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வந்ததால் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை அட்டவணையை வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வந்தது . தற்போது ஆசிய கோப்பை போட்டிகளுக்கு ஒரு தீர்வு கிடைத்திருப்பதால் உலகக் கோப்பை அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது