ஆசிய கோப்பை.. 11 வருடத்திற்கு பிறகு பழி தீர்த்த விராட் கோலி கே.எல்.ராகுல் ஜோடி.. புதிய சாதனை!

0
3178
Virat

இந்திய அணி இன்று பல விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும் உலகக்கோப்பை தொடர்பாக அணி நிர்வாகத்திற்கும் தெளிவான பார்வையைக் கொடுத்திருக்கிறது!

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் மொத்தமாக சரிந்தது. ஆனாலும் ஹர்திக் பாண்டியா மற்றும் இசான் கிஷான் இருவரும் மீட்டுக் கொண்டு வந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் மீது இந்தியாவிற்குள் இருந்தே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்திய அணி உலகக்கோப்பைக்கு முன்பாக இதற்கான பதிலடி தர வேண்டிய நெருக்கடியில் இருந்தது.

இன்னொரு பக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் எந்த வீரர்கள் முக்கியமாக பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள்? யாருக்கு எந்த இடம்? என்பது குறித்து தெளிவில்லாமல் இருந்தது.

இன்று விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அதிரடியாகச் சதம் அடித்தது, பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் அற்புதமான துவக்கம் தந்தது, பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடையளித்திருக்கிறது.

- Advertisement -

நேற்று இந்திய அணி 123 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என இருந்த பொழுது, விராட் கோலி உடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இதை அடுத்து இன்று தொடர்ந்து போட்டியில் இவர்கள் இருவரும் விக்கெட்டை விடவே இல்லை.

சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 100 பந்துகளில் சதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய விராட் கோலி 84 பந்துகளில் சதம் அடித்தார். இந்த ஜோடி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனை ஒன்றையும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக படைத்திருக்கிறது.

இன்று விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்னாக பதிவாகி இருக்கிறது. இவர்கள் பாகிஸ்தான் ஜோடி ஒன்றின் சாதனையை முறியடித்து இருக்கிறார்கள். இதில் ஒரு சுவாரசியமான விஷயமும் இருக்கிறது.

2012 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக ஜாம்ஷத் மற்றும் முகமது ஹபீஸ் இருவரும் சதம் அடித்ததோடு 224 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஆசியக்கோப்பை வரலாற்றில் ஒரு ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். மேலும் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் ஆறு விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் சேர்த்தது. இதே போட்டியில்தான் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் 183 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருந்தார்.

தற்பொழுது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் ஜோடி படைத்திருந்த சாதனையை, அதே அணிக்கு எதிராக இந்திய ஜோடியான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் உடைத்து படைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!