பதினாறாவது ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று இலங்கை கண்டி மைதானத்தில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடியது!
இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தால். மழைமேகங்கள் சூழ்ந்து இருக்க பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் தென்பட்டிருந்த வேளையில், அவர் இப்படியான முடிவை எடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
பங்களாதேஷ் பேட்டிங் செய்ய வந்த பொழுது பங்களாதேஷ் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய நினைத்தது எந்த அளவிற்கு தவறு என்பது வெளிப்படையாக தெரிந்தது. பங்களாதேஷ் அணியின் நஜ்புல் ஹுசைன் சாந்தோ தவிர ஒருவரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. அவர் மட்டுமே 122 பந்துகளில் ஏழு பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்தார்.
அனுபவ வீரர்களான ஷகிப் அல் ஹசன் 5,
முஷ்பியூர் ரஹீம் 13, மெகதி ஹசன் மிராஸ் 5 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்தார்கள். பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணியின் தரப்பில் பந்து வீச்சில் மதிஷா பதிரனா 7.4 ஓவர்கள் பந்துவீசி, 32 ரன்கள் தந்து, 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தீக்சனா எட்டு ஓவர்கள் பந்து வீசி, ஒரு மெய்டன் செய்து, 19 ரன்கள் மட்டுமே தந்து இரண்டு விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷாங்கா 14, திமோத் கர்ணரத்தினே 1, குசால் மெண்டிஸ் 5 என சொற்ப ரன்களில் வெளியேறி ஆட்டத்தில் பரபரப்பை உண்டாக்கினார்கள்.
ஆனால் இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த
சதிரா சமரவிக்ரமா மற்றும் சரித் அசலங்கா இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை நெருக்கடியான நிலையில் இருந்து மீட்டெடுத்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சிறப்பாக விளையாடிய சமரவிக்ரமா அரை சதம் அடித்து, 77 பந்துகளில் ஆறு பவுண்டரி உடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இவருக்கு அடுத்து வந்து அதிரடியில் ஈடுபட முயன்ற தனஞ்செய டி சில்வா இரண்டு ரன்களில் வெளியேறினார். இதற்கு அடுத்து விக்கெட்டுகள் ஏதும் மேற்கொண்டு விழாமல் 39 ஓவர்களில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற அசலங்கா 92 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸர் உடன் 62 ரன்கள் சேர்த்த. இவருடன் நின்ற கேப்டன் டசன் சனகா 14 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். முதல் போட்டியில் 11 ஓவர்கள் மீதம் இருக்க இலங்கை வெற்றி பெற்றிருக்கின்ற நிலையில், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.