ஆசிய கோப்பை.. பாகிஸ்தான் போட்டி டிரா.. இந்திய அணிக்கு பெரிய சிக்கல்.. அடுத்த மேட்ச் இது மட்டும் நடந்தால் வெளியில்தான்!

0
48544
Rohit

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டி, யாரும் விரும்பாத வகையில், மழையின் காரணமாக இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிவடைந்து இருக்கிறது!

இன்று இந்த போட்டியின் ஆரம்பத்தில் டாசில் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று தீர்மானித்தார். இந்திய அணியில் பிரதான வேகப்பந்துவீச்சாளர் சமிக்கு இடம் தரவில்லை. மேலும் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரிடமும் செல்லவில்லை. மாறாக வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு தரப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் புதிய பந்தில் பாகிஸ்தானின் அற்புதமான வேகப்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய முன் வரிசை பேட்ஸ்மேன்கள் பெரிய சிரமத்தை சந்தித்தார்கள். குறிப்பாக ஷாகின் ஷா அப்ரிடி பந்துவீச்சு மிகவும் சிரமத்தை கொடுத்தது.

இந்திய அணி 14.1 ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா 11, சுப்மன் கில் 10, விராட் கோலி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 14 என ரன்கள் எடுத்து வெளியேற 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதங்கள் அடித்தார்கள். இஷான் கிஷான் 82, ஹர்திக் பாண்டியா 87 ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து மீண்டும் இந்திய அணி விக்கெட் சரிவில் மாட்டிக்கொண்டது. திரும்பி வந்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 14, சர்துல் தாகூர் 3, குல்தீப் யாதவ் 4, ஜஸ்ட்ப்ரித் பும்ரா 16 என வரிசையாக வெளியேற்றினார்கள். முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நாப்பத்தி எட்டு புள்ளி ஐந்து ஓவரில் 266 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் சா அப்ரிடி
பத்து ஓவர்கள் பந்து வீசி, இரண்டு மெய்டன்கள் செய்து, 35 ரன்கள் விட்டு தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுப் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிப்பதற்கு முன்பாக மழை பெய்ய தொடங்கியது. மைதான ஊழியர்கள் முடிந்த வரை விரைவாக செயல்பட்டு, தார்ப்பாய்களைக் கொண்டு மூடி மைதானத்தை மழையிலிருந்து பாதுகாத்தார்கள். ஆனாலும் குறிப்பிட்ட நேரம் வரை மழை நிற்காததாலும், மேற்கொண்டு மழை நின்றாலும் போட்டியை குறிப்பிட்ட நேரத்தில் துவக்க முடியாது என்பதாலும், போட்டி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணி அடுத்து செப்டம்பர் நான்காம் தேதி நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருவேளை அதிசயம் நடந்து இந்திய அணி தோற்கும் என்றால், ஆசியக் கோப்பை தொடரின் முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறும் பரிதாப சூழலும் வரும். இரண்டு குழுக்களில் உள்ள மூன்று அணிகளும், தங்கள் குழுவில் உள்ள மற்ற இரண்டு அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாட வேண்டும். அந்த இரண்டு போட்டியின் முடிவில் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.