2025 ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் , ரிஸ்வான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இது குறித்து பேசிய பாகிஸ்தானின் தேர்வுக்குழுத் தலைவர் ஆகிப் ஜாவேத், 17 பேர் கொண்ட இந்த அணி, வலிமையான இந்திய அணியை வீழ்த்தும் திறன் கொண்டது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடி, வெறும் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாவேத், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அணி வரவிருக்கும் தொடரில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
அழுத்தம் கொடுக்கக் கூடாது:
இது குறித்து பேசிய அவர், “பாகிஸ்தானின் டி20 அணியால் இந்தியாவை வீழ்த்த முடியும். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் மிகப்பெரியவை. இந்த 17 பேர் கொண்ட அணி எந்த அணியையும் தோற்கடிக்கும் திறன் கொண்டது. அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கக் கூடாது, ஆனால் இந்த அணியின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது.”
“நாங்கள் பாபர், ரிஸ்வானை முற்றிலும் ஒதுக்கவில்லை. தற்போதைய தேர்வுகள் ஒரு வீரர் எவ்வாறு வளர்கிறார் என்பதை பிரதிபலிக்கின்றன. சாஹிப்ஸாதா பர்ஹான், சயிம், மற்றும் பக்ஹர் ஆகியோரை உதாரணமாகக் கூறியுள்ளேன். சாஹிப்ஸாதா மீண்டும் வந்தார், சயிம் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் தாக்கத்தை ஏற்படுத்தினார்,” என்று ஜாவேத் கூறினார்.
வேறு எந்த காரணமும் இல்லை:
அனைத்து வீரர்களும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், வேறு எந்த வெளிப்புற காரணிகளும் இதில் இருக்கவில்லை என்றும் ஜாவேத் தெரிவித்தார். பல்வேறு டி20 தொடர்களில் திறமையை வெளிப்படுத்திய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், டி20 செயல்பாடு தேர்வுக்கு முக்கிய அளவுகோலாக இருப்பதாகவும், அவர் விளக்கினார்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை அணி தேர்வு.. தலைவலியாகும் 15வது இடம்.. 4 வீரர்கள் போட்டி.. தேர்வுக்குழு முடிவு என்ன?
“எந்த வீரரின் வாழ்க்கையையும் முடித்துவிட முடியாது. வாய்ப்புகள் எப்போதும் உள்ளன. தற்போது, அவர்கள் பிக் பாஷ் மற்றும் பிஎஸ்எல் போன்ற லீக்களில் அனுபவம் பெறுகின்றனர். செயல்படுபவர்களே விளையாட தகுதியானவர்கள்,” என்று ஜாவேத் கூறினார். .2025 ஆசிய கோப்பை செப்டம்பர் 09 அன்று தொடங்குகிறது. பாகிஸ்தான், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகியவற்றுடன் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது.






