ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று மும்பையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடும் மழையை பொருட்படுத்தாமல் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட கில், டி20 அணியின் புதிய துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
பும்ராவுக்கு வாய்ப்பு:
இதேபோன்று உடல் பனிச் சுமை காரணமாக இங்கிலாந்து தொடரில் வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய பும்ராவுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் தொடர்கிறார்கள். இதேபோன்று திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே ஆகியோருக்கு நடு வரிசையில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சுழற் பந்துவீச்சுப் படையில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பந்துவீச்சில் பும்ரா, ஆர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் பினிஷராக ரிங்கு சிங் இடம் பிடித்துள்ளார். கூடுதல் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்.
சூர்யகுமார் விளக்கம்:
கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய சூரியகுமார் யாதவ், நாங்கள் கடைசியாக இலங்கைக்கு சென்ற போது டி20 போட்டிகளில் விளையாடினார். அப்போதும் அணியில் அவர்தான் துணை கேப்டனாக இருந்தார். தற்போது நாம் அடுத்த டி20 உலக கோப்பைக்கான புதிய சைக்கிளில் தொடங்கி இருக்கின்றோம்.
டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தியதால் டி20 கிரிக்கெட்டில் அவர் விளையாடவில்லை. தற்போது டி20 உலக கோப்பை வர இருக்கிறது. அதற்கு முன்பு ஆசிய கோப்பை மிகப்பெரிய தொடர் என்பதால் கில் அணியில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அவர் அணிக்கு திரும்பியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றது. டி20 உலக கோப்பைக்கு முன் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாட போகின்றோம். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் பயிற்சியாக எடுத்து விளையாடுவோம் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிப்பு தாமதம் ஏன்?.. ரோஹித் சர்மா திடீர் எச்சரிக்கை .. வெளியான புதிய தகவல்கள்
இந்திய அணி விவரம்: 1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2.சுப்மன் கில் (துணை கேப்டன்), 3.திலக் வர்மா, 4. சஞ்சு சாம்சன், 5. அபிஷேக் சர்மா, 6. ஹர்திக் பாண்டியா, 7.சிவம் துபே, 8. ரிங்கு சிங், 9.பும்ரா, 10. ஆர்ஸ்தீப் சிங், 11. ஹர்சித் ரானா, 12. வருண் சக்கரவர்த்தி, 13. அக்சர் பட்டேல், 14. ஜித்தேஷ் சர்மா, 15. குல்தீப் யாதவ்






