ஆசிய கோப்பை 2025 தொடரில் சஞ்சு சாம்சன் தனது பேட்டிங் வாய்ப்பு குறித்து கவலைப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, தெரிவித்துள்ளார். ஓமன் அணிக்கு எதிரான குரூப் ஏ-யின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் மிடில் ஆர்டர் வீரர்களான சாம்சனுக்கு போதுமான பேட்டிங் பயிற்சி கிடைக்கும் என்று அவர் கூறினார்.அபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்தியா-ஓமன் போட்டியில், ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா தொடக்க வீரர்களாக களமிறங்குவதால், சாம்சன் மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இரண்டு குரூப் ஆட்டங்களில் யுஏஇ மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்தியாவின் அபார வெற்றிகளின்போது சாம்சனுக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
முதலில் பேட் செய்யுங்கள்:
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா “இந்தியா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். முதல் ஆட்டத்தில் 50 ரன்களையும், இரண்டாவது ஆட்டத்தில் 130 ரன்களையும் துரத்தினீர்கள். முதலில் பேட்டிங் செய்தால், அனைவருக்கும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இப்போது அனைவரும் ஃபார்மில் இல்லை.”
” சாம்சன் தனது பேட்டிங் வாய்ப்பு குறித்து யோசித்துக்கொண்டிருக்கலாம். இந்த ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால், முழு ஆசிய கோப்பையிலும் பேட் செய்யாமல் போகலாம். அவருக்கு வாய்ப்பு கொடுத்து ஃபார்மில் கொண்டுவர வேண்டும்,”
அதிக வாய்ப்பு வழங்கனும்:
“இப்போது அவருக்கு விஷயங்களை கடினமாக்கிவிட்டீர்கள். முதல் மூன்று இடங்களில் ஆடாததால், அவருக்கு எளிதாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் பெரும்பாலான ரன்களை டாப் ஆர்டரில் எடுத்தவர். இப்போது 5 முதல் 7 வரையிலான இடங்களில் ஆட வைத்தால், அவருக்கு அதிக வாய்ப்புகள் தேவை.ஒரு தொடக்க வீரருக்கு 10 வாய்ப்புகள் கொடுக்கிறீர்கள் என்றால், மிடில் ஆர்டரில் ஆடும் சாம்சனுக்கு 20 வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.”
இதையும் படிங்க: முன்னாள் கோச்சா சொல்றேன்.. இந்த 26 வயசு பையனுக்கு இந்திய டீம்ல இடம் கொடுங்க – சஞ்சய் பாங்கர் வேண்டுகோள்
“அவருக்கு பேட்டிங் வாய்ப்பு பாதி நேரம் கூட கிடைப்பதில்லை,” என்று அவர் கூறினார்.சாம்சன் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் பேட் செய்து, சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால், அவர் மோசமாக ஆடிவிட்டதாக முடிவு செய்யப்படும் என்று ஆகாஷ் எச்சரித்தார். 30 வயதான சாம்சனுக்கு, அவரது இடத்திற்கு ஏற்ப அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், இல்லையெனில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை தடைபடலாம்”என்று அவர் கவலை தெரிவித்தார்.






