அஸ்வின் இல்லை.. “இந்திய அணியின் நம்பர்1 ஸ்பின்னர் இவர்தான்” – அபினவ் முகுந்த் அதிரடியான கருத்து!

0
617
Ashwin

நேற்று இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்பொழுது முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய ஸ்பின்னர்களான ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவிடம் 7 விக்கெட்டை பறிகொடுத்து 114 ரன்களுக்கு சுருண்டு தோற்றது.

- Advertisement -

இதில் குல்தீப் யாதவ் வெறும் மூன்று ஓவர்கள் மட்டும் பந்துவீசி, அதில் 2 மெய்டன் ஓவர்களாக வீசி, 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி இருந்தார். மேலும் இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பந்தை கணிப்பது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது.

இவரைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த அபினவ் முகுந்த் கூறுகையில் “நான் முன்பே கூறியது போல, இந்த இந்திய அணி நிர்வாகம் குல்தீப் யாதவ் மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்திருக்கிறது. முந்தைய உலகக் கோப்பைக்கு முன்பு அவர் எங்கோ வனாந்தரத்தில் இருந்தது போல இருந்தார். அவர் இப்பொழுது திரும்பி வந்து கிட்டத்தட்ட மூன்று விதமான இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெறக்கூடிய வீரராக இருக்கிறார்.

அவர் தன்னை இந்தியாவின் நம்பர் ஒன் வெள்ளைப்பந்து சுழற்பந்துவீச்சாளர் என்று காட்டியிருக்கிறார். அவரும் சாகலும் களத்திற்கு வெளியே நல்ல நட்பைக் கொண்டு இருக்கிறார்கள். சாகல் இடம் இருந்து கற்றுக் கொள்வதாக குல்தீப் யாதவே கூறியிருக்கிறார்.

- Advertisement -

குல்தீப் யாதவ் இந்த தொடரில் சாகலை முந்தி சென்று விடுவார் போல தெரிகிறது. ஆனால் நான் சாகலுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். குல்தீப் யாதவ் கடந்த ஆண்டு முதலில் விதிவிலக்காக விளையாடி வருகிறார்.

அவருக்கு கே கே ஆர் அணியில் ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான சீசன்கள் அமைந்திருந்தது. அவர் அந்த அணியில் இருந்து விடுபட்டு டெல்லி அணிக்கு வந்து தன்னை நிரூபித்து இருக்கிறார். 2022 எடுத்துக் கொண்டால் அதிக நான்கு விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளராக அவர்தான் இருப்பார்.

அணி நிர்வாகம் மற்றும் மக்கள் அவரை புறக்கணித்ததற்கு பின்பாக அவர் மிகவும் சிறப்பாக திரும்பி வந்திருக்கிறார். அவர் பந்தினுடைய வேகம் சிறப்பாக இருக்கிறது. மேலும் அவரது பந்துவீச்சை கணிப்பது மிக மிக சிரமமாக இருக்கிறது!” என்று புகழ்ந்து பாராட்டி கூறியிருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கடைசியாக டி20 உலகக்கோப்பையில் கடந்த ஆண்டு விளையாடியிருந்தார். மேலும் அதற்கு முன்பு இந்திய வெள்ளைப்பந்து அணியில் இடம்பெறாமல்தான் இருந்தார். அதேபோல தற்பொழுது இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியில் இடம்பெறாமல் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை, இந்தியாவில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக செய்திகள் கசிந்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது!