கிரிக்கெட் உலகில் தான் பார்த்ததில் மிகச்சிறந்த பீல்டர் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் கிளன் பிலிப்ஸ் இருவரையெல்லாம் தாண்டி ஒரு இந்திய வீரரே இருக்கிறார் என இந்திய முன்னாள் வீரர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி மிகச் சிறப்பான முறையில் விளையாட எட்டு போட்டிகளில் 10 புள்ளிகள் உடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்து வருகிறது. ஹர்திக் பாண்டியா வெளியேறி ஏற்பட்டு இருந்த பிரச்சனைகளை மெகா ஏலத்தில் சரி கட்டி ஆசிஸ் நெக்ரா மீண்டும் வலிமையான அணியை உருவாக்கி இருக்கிறார்.
ஜாண்டி ரோட்ஸ் – கிளன் பிலிப்ஸ்
பொதுவாக கிரிக்கெட்டில் பீல்டிங் மிகப் பெரிய தாக்கத்தை சத்தம் இல்லாமல் ஏற்படுத்தக்கூடியது. ஒரு சிறந்த கேட்ச் அல்லது ஒரு சிறந்த ரன் அவுட் ஒரு ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி விடக் கூடிய சக்தி படைத்தது. கிடைக்கின்ற கேட்ச் வாய்ப்புகளை எந்த அணி மிகச் சிறப்பாக எடுக்கிறதோ அந்த அணிதான் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகளை பெறுகிறது.
இந்த வகையில் கிரிக்கெட் உலகில் ஆரம்பத்தில் தென் ஆப்ரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் தன்னுடைய அசாத்தியமான டைவிங் பீல்டிங் மூலமாக அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இளம் வீரர்கள் பீல்டிங் பக்கம் கவனத்தைத் திருப்ப முக்கிய காரணமாக இருந்தார். இந்த காலகட்டத்தில் கிளன் பிலிப்ஸ் ஜாண்டி ரோட்ஸ் போல அசாத்தியமான கேட்சுக்களை எடுத்து ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்த இந்தியர்தான் சிறந்த பீல்டர்
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஆசிஸ் நெக்ரா கூறும்பொழுது “கிரிக்கெட்டில் பல காலமாக பல பீல்டர்களை நான் பார்த்து வந்திருக்கிறேன். இதில் சிலர் வெளிவட்டத்திலும் சிலர் உள்பட்டத்திலும் சிறந்த பீல்டர்களாக இருந்திருக்கிறார்கள். பொதுவாக ஜாண்டி ரோட்ஸ் உள் வட்டத்தில் சிறந்த பீல்டராக கருதப்படுகிறார். எல்லா பக்கத்திலும் சிறந்த பீல்டர் பற்றி பேசும் பொழுது ஏபி டிவில்லியர்ஸ் முக்கியமானவராக இருக்கிறார். மேலும் இவருடன் சைமன்ஸ் மற்றும் ஜடேஜாவும் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : கவாஸ்கர் முட்டாள்னு சொன்னது தப்பே இல்ல.. கோலியை பார்த்துமா திருந்தல ரிஷப் பண்ட் – மனோஜ் திவாரி விமர்சனம்
“இந்த வகையில் நான் முதல் இடத்தில் ஜடேஜாவைதான் வைப்பேன். இதற்கு முக்கிய காரணம் தற்போதைய அவரது வயது மட்டும் கிடையாது. அவர் பல காலமாக பீல்டிங்கை பொறுத்த வரை ஒரே மாதிரியான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவரது திறமை மாறவே இல்லை. இது அவருடைய அபாரமான உடல் தகுதியில் இருந்து வருகிறது. அவர் இதற்கு என்ன மாதிரியான உணவு உட்கொள்கிறார் என்று தெரியவில்லை. அவர் இது குறித்த உண்மையை வெளியில் சொல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






