கேப்டன் கம்மின்ஸ், கவாஜா போராட்டத்தால் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! – கடைசி 2 விக்கெட் எடுக்க முடியாமல் கோட்டைவிட்ட இங்கிலாந்து!

0
1719

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 281 ரன்கள் இலக்கை சேஸ் செய்து ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் அடித்து முதல் இன்னிங்சை டிக்ளர் செய்தது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா 141 ரன்கள் அடித்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அலெக்ஸ் காரி 66 ரன்கள் அடித்து பக்கபலமாக இருந்தார். இறுதியில் 386 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது.

7 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ரூட் 46 ரன்கள், ஹாரி புரூப் 46 ரன்கள், ஸ்டோக்ஸ் 43 ரன்கள் அடித்து ஆங்காங்கே பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் பெரிய ஸ்கோர் வரவில்லை என்பதால் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதியாக 280 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

281 ரன்கள் எனும் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் முடிவில் 17 ரன்களுக்கு மூன்று முக்கியமான விக்கெடுகளை இழந்திருந்தது. வார்னர் 36 ரன்கள், லபுஜானே 13 ரன்கள், ஸ்மித் 6 ரன்கள் என மூன்று வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணி நம்பிக்கையுடன் இருந்தது. 4ஆம் நாள் முடிவில் 107 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலியா.

- Advertisement -

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் முதல் செஷன் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது. உணவு இடைவேளை வரை நிற்கவில்லை. உணவு இடைவேளை முடிந்த பிறகே ஐந்தாம் நாள் ஆட்டம் துவங்கியது.

மீதமிருக்கும் ஐந்தாவது நாளில் 67 ஓவர்கள் வீசப்படும் என்று நடுவர்கள் அறிவித்திருந்தனர். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கு 174 ரன்கள் தேவைப்பட்டது. இங்கிலாந்து அணி வெற்றி பெற ஏழு விக்கெட்டுகள் தேவைப்பட்டது. களத்தில் கவாஜா மற்றும் ஸ்காட் போலண்ட் இருவரும் இருந்தனர்.

நைட் வாட்ச்மேன் ஆக வந்த போலண்ட், 20 ரன்கள் அடித்து தனது வேலையை முடித்துக்கொடுத்து வெளியேறினார். அடுத்து உள்ளே வந்து டிராவிஸ் ஹெட் 16 ரன்கள் மற்றும் கேமரூன் கிரீன் 28 ரன்கள் என பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்து வெளியேறியதால் இங்கிலாந்து அணி நம்பிக்கையை பெற்றது.

ஒரு பக்கம் கவாஜா நிலையாக நின்றுகொண்டு அரைசதம் அடித்து களத்தில் நின்றதால், இங்கிலாந்து அணிக்கு பெரிய நம்பிக்கை இல்லை. கடைசியில் ஸ்டோக்ஸ் அவரது விக்கெட்டை தூக்கினார். கவஜா 65 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறிய பிறகு, இங்கிலாந்து அணிக்கு கூடுதல் நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு ஆக்ரோஷமாகவும் ஆட்டம் சென்றது.

இருப்பினும் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து அசத்திய அலெக்ஸ் கேரி இன்னும் களத்தில் இருந்தார். சரியான நேரத்தில் அவரது விக்கெட்டை ஜோ ரூட் எடுத்து கொடுக்க இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் கைப்பற்றி விட்டது. அதேநேரம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 54 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் கம்மின்ஸ் மற்றும் நேதன் லயன் இருவரும் விக்கெட் விடாமல் விடாப்பிடியாக நின்று போராடினர். கேப்டன் ஸ்டோக்ஸ், ராபின்சன், பிராட் என இங்கிலாந்தின் தூண்கள் அனைவரும் போராடிப்பார்த்தும் இவர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. கம்மின்ஸ் மற்றும் லயன் இருதிவரை நின்று ஆஸ்திரேலியா அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.