மழையால் தப்பிய ஆஸ்திரேலியா… இங்கிலாந்து அணிக்கு இப்படியொரு நிலையா? தொடர்ந்து 4ஆவது முறையாக ஆஷஸ் ஆஸ்திரேலியா கையிலா? – ரிப்போர்ட்!

0
1062

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆவது மற்றும் 5ஆவது நாளில் மழை பெய்து ஆட்டம் டிராவை நோக்கி செல்கிறது. இதனால் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 4ஆவது முறையாக ஆஷஸ் கோப்பையை தக்கவைக்கிறது எனும் நிலையும் வந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றது. தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வந்தது.

- Advertisement -

நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலி, ஜானி பேர்ஸ்டோவ், ரூட், ஸ்டோக்ஸ், புரூக் என பேட்ஸ்மேன்கள் பலரும் அபாரமாக விளையாடியதால் 592 ரன்கள் குறித்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி இதன் மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையிலும் இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையிலும் காணப்பட்டது.

நான்காம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் போட்டியில் சில மணி நேரங்கள் தடைபட்டது. பின்னர் மழை நின்றதால் பேட்டிங் துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு மார்னஸ் லபுஜானே மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவர் 111 ரன்களுக்கு அவுட் ஆனார்.

- Advertisement -

214 ரன்கள் அடித்து ஐந்து விக்கட்டுகளை ஆஸ்திரேலியா அணி இழந்திருந்தபோது மீண்டும் மழை பெய்தால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் 4ஆம் நாள் முடித்துக் கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

62 ரன்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணியை எளிதாக விக்கெட்டுகள் வீழ்த்தி, போட்டியை கைப்பற்றிவிடலாம். இத்துடன் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்யலாம் என்று காத்திருந்த இங்கிலாந்து அணிக்கு ஐந்தாம் நாள் ஆட்டம் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் நாள் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருந்தது.

ஐந்தாம் நாள் முடிவடைய இன்னும் இரண்டு மணி நேரங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், தற்போது வரை மழை நிற்காமல் பெய்து வருவதால் கிட்டத்தட்ட போட்டி ஓவர்கள் எதுவும் வீசப்படாமல் முடித்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

கடைசியாக இங்கிலாந்து அணி 2015 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வென்றது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடர், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடர் இரண்டையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-2 என சமன் செய்து கோப்பையை தக்கவைத்தது.

தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளை வென்றது ஆஸ்திரேலியா. மூன்றாவது போட்டியை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் முனையில் இருந்தபோது, மழையின் குறுக்கீட்டால் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

போட்டி டிரா ஆனது என்று அறிவிக்கப்படும் பட்சத்தில், மீதம் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும் தொடரை சமன் செய்ய மட்டுமே முடியும். அப்போதும் ஆஸ்திரேலியா அணி கோப்பையை தக்கவைக்கும்.

கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவினாலும் அது ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாகத்தான் முடியும் என்பதால் தொடர்ந்து நான்காவது முறையாக ஆஷஸ் கோப்பையை தன்வசம் வைக்கவுள்ளது ஆஸ்திரேலியா.