ஆஷஸ் 2025-26 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் டிசம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் முதுகு வலி காரணமாக பேட்டிங் செய்ய முடியாமல் போன உஸ்மான் கவாஜா அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் முழுநேர கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு முழு உடற்தகுதி பெற கூடுதலாக இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
32 வயதான கம்மின்ஸ் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அங்கு பிங்க் பந்துடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கம்மினா பந்துவீசினார். அவர் திரும்பி விளையாட தயாராக இருந்தாலும், அணி நிர்வாகம் கேப்டனை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
எனவே டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கும் மூன்றாவது டெஸ்டில்தான் கம்மின்ஸ் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோஷ் ஹேசில்வுட்டும் ஹாம்ஸ்ட்ரிங் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், பிரெண்டன் டாகெட் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது.
ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார். பெர்த்தில் அறிமுகமான டாகெட் இரு இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அடிலெயட் பிங்க் பால் டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க்குடன் இணைந்து புதிய பந்தை டாகெட் வீசலாம் எனத் தெரிகிறது. ஏனெனில் ஸ்காட் போலாண்ட் முதல் போட்டியில் புதிய பந்தில் சிரமப்பட்டார்.
பெர்த்தில் ரன் சேஸின் போது சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட், கவாஜாவுக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி-ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன், நாதன் லயன், மைக்கேல் நீசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், போ வெப்ஸ்டர்.
தனது காயம் குறித்தி பேசிய, ஜோஷ் ஹேசில்வுட், “மெதுவாகத்தான் முன்னேற்றம் இருக்கிறது. நேற்றுதான் மீண்டும் பந்துவீச ஆரம்பித்தேன். ஓட்டம், எல்லாம் நன்றாக உள்ளது. எப்போது திரும்புவேன் என சரியாகச் சொல்ல முடியவில்லை.தொடரின் பிற்பகுதியில் பங்கேற்பேன் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க: தோனி ஜடேஜாவுக்கு செஞ்ச அதை.. கம்பீர் மற்றவர்களுக்கு செய்யணும் – ராபின் உத்தப்பா வெளிப்படை பேச்சு
அப்போது போட்டி இன்னும் சமநிலையில் இருக்கக்கூடாது. நாங்கள் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் சாதனை அபாரமானது. இதுவரை 13 போட்டிகளில் ஒரு தோல்வி மட்டுமே அடைந்துள்ளது.