சச்சினோட மகனுக்கு இந்த வருஷமாவது வாய்ப்பு கிடைக்குமா? – ரோகித் சர்மா பதில்!

0
927

அர்ஜுன் டெண்டுல்கர், இந்த வருடமாவது பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறுவாரா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார் ரோகித் சர்மா.

ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல்தர கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடுகிறார்.

- Advertisement -

முன்னதாக மும்பை அணிக்கு விளையாடி வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா அணிக்கு மாறினார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் முதல்முறையாக இவரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.

துரதிஷ்டவசமாக, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். ஆனால் பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

உள்ளூர் மும்பை அணிக்கு டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடிய அனுபவமும் உண்டு. கோவா அணிக்கு மாறியபின் முதல்முறையாக முதல்தர டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகினார். சிறப்பாக செயல்பட்டு தனது முதல் சதத்தையும் அடித்தார்.

- Advertisement -

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நல்ல நிலையில் இருக்கிறார். இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இல்லை. அவருக்கு மாற்று வீரரை மும்பை அணி விரைவில் அறிவிக்கும் என்று சமீபத்தில் பேட்டி அளித்த ரோகித் சர்மா கூறினார்.

பேட்டியின்போது, அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த ரோகித்,

“நிச்சயமாக வாய்ப்புகள் இருக்கிறது அவரது பந்துவீச்சை கவனித்தேன். நன்றாக செயல்படுகிறார். கடந்த வருடம்போல இல்லாமல் நல்ல உடல்தகுதியும் இருக்கிறார். ஆகையால் அவரை விளையாட வைக்க வாய்ப்புகள் உண்டு.” என்றார்.

மேலும் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில், “அர்ஜுன் டெண்டுல்கரை கவனித்து வருகிறோம். அவரது பந்துவீச்சில் நல்ல முதிர்ச்சி இருக்கிறது. இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும் இருக்கிறார். முக்கிய பங்காற்ற வாய்ப்புகள் உண்டு. பிளேயிங் லெவனுக்கு அவர் சரியாக இருப்பார் என்றால் கண்டிப்பாக வாய்ப்புகள் கொடுப்போம்.” என்று கூறினார்.