உங்களுக்கு மன நோயா? ஷகிப் அல் ஹசன் – தமிம் இக்பால் விவகாரத்தில் முன்னாள் கேப்டன் அதிரடி பேச்சு!

0
1304
Bangladesh

தற்போது பங்களாதேஷ் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறது. ஆனால் அணிக்குள்ளும் பங்களாதேஷிலும் நிலைமைகள் சுமுகமாக இல்லை!

பங்களாதேஷ் அணிக்கு 17 வருடமாக விளையாடி வந்த மூத்த துவக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் அதிரடியாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

அவரை உலகக்கோப்பையில் கீழே விளையாடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர் தன்னால் முடியாது என்று கூறிவிட்டதாகவும், இதனாலே அவரே விலகிக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

இதற்கடுத்து தற்போதைய கேப்டன் ஷகிப் அல் ஹசன், கேப்டன் ரோஹித் சர்மாவை முன் உதாரணம் காட்டி, அணிக்காக யாரும் எந்த இடத்திலும் விளையாட வேண்டும், இது என்னுடைய பேட் இதில் யாரும் விளையாட கூடாது என்று சொல்வது போல குழந்தைத்தனமாக இருக்கக் கூடாது என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் பங்களாதேஷ் கிரிக்கெட்டில் உச்ச கட்டத்தை எட்டி, இருதரப்பின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய காட்டமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளையாடவில்லை. அவர் கோல்ப் விளையாட்டில் பயிற்சி ஆட்டத்திற்கு முன்பாக காயம் அடைந்ததால் விளையாடவில்லை என்று கூறப்பட்டது. மேலும் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது.

தற்பொழுது இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆதரவு, எதிர்ப்பு என்று மிக மோசமான முறையில் பேசி வருவதாக தெரிகிறது. தற்போது இதற்கு முன்னாள் பங்களாதேஷ் கேப்டன் மஷ்ரபே முர்தாசா கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“ஷாஹிப் காயம் அடைந்தார் அதனால் அவர் விளையாடவில்லை. அவர் விரைவில் குணமடையட்டும். ஆனால் அவர் தொடர்ந்து விளையாடுவாரா? இல்லை விளையாட மாட்டாரா? என்று சமூக வலைதளத்தில் எழுதக்கூடியவர்களை நான் பார்க்கிறேன். டீமில் இருந்து விலக்கப்பட்டது இது ஒரு விஷயமா? இது என்ன மாதிரியான மனநோய்!

என்ன தலைமுறையை பார்க்கிறோம்? இவர்கள் என்ன மாதிரி மனநிலையில் வளர்கிறார்கள்? வாழ்க்கையில் பொறாமையை வளர்த்துக் கொண்டு எதை சாதிப்பார்கள்?

இது ஒரு தனிநபர் அணியா? அல்லது ஒரு நாட்டின் அணியா? ஷாகிப் மட்டுமல்ல அங்குள்ள அனைவரும் நம் நாட்டின் பிரதிநிதிகள். அவர்கள் எங்களுடைய சொந்த உலகக்கோப்பை கனவை சுமப்பவர்கள்.

உங்களுக்கு பிடித்த சில வீரர்கள் அணிகள் இல்லாமல் இருக்கலாம், அல்லது அணியில் இருந்தும் விளையாடாமல் இருக்கலாம். ஆனால் அணி நம்முடையது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உலகக் கோப்பை அணிக்கு ஆதரவாக இருப்பதும் அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதும், இப்போது மிக முக்கியமானது!” என்று கூறி இருக்கிறார்!