இன்று பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே உலகக் கோப்பையில் மிக முக்கியமான போட்டி நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் சிலர் காயமடைந்திருப்பது குறிப்பாக பந்துவீச்சாளர்கள் காயம் அடைந்திருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருந்தது.
அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக நியூசிலாந்தில் இருந்து ஜெமிசன் நேற்றுதான் அணியில் வந்து இணைந்தார்.
மேலும் நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் பெர்குஷன், மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீசம் ஆகியோர் காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் போட்டிக்கான டார்சில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் இந்த முடிவு பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை தற்பொழுது கொடுத்து இருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா 108, கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது.
சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தடுமாறும் நியூசிலாந்து அணியிடம் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது மிகவும் சர்ச்சையாகி வருகிறது. குறிப்பாக இது பாகிஸ்தானுக்கு வாழ்வா சாவா? போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விமர்சித்துள்ள சோயப் அக்தர் கூறும் பொழுது “பாகிஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை. நியூசிலாந்து அணியில் கேப்டன் மற்றும் பாதி பந்துவீச்சாளர்கள் காயம் அடைந்து இருக்கின்ற நிலையில், உங்களால் ஏன் பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் விளையாட முடியவில்லை?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்!