“என் திட்டங்கள் தப்பா? இல்லை இவர்கள் அதை சரியாக செய்யவில்லையா என்று பார்க்க வேண்டும்!” – தோல்விக்குப் பின் தோனி!

0
580
Dhoni

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடந்த பரபரப்பான போட்டியில் கடைசிப் பந்தில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தியது!

டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

- Advertisement -

20 ஓவர்கள் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை குவித்தது!

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு வந்தவர்கள் எல்லோரும் சராசரியான பங்களிப்பை தந்து கொண்டே இருக்க, இறுதி நேரத்தில் துஷார் பந்துவீச்சில் மூணு சிக்ஸர் ஒரு பவுண்டரி லிவிங்ஸ்டன் எடுக்க ஆட்டம் பஞ்சாப் பக்கம் வந்தது.

கடைசி ஓவருக்கு ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்கந்தர் ராஸா பதிரனாவை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய மகேந்திர சிங் தோனி ” நடுவில் வீசப்பட்ட ஒன்று இரண்டு ஓவர்களினால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். நீங்கள் இந்த மாதிரியான நேரத்தில் என்ன மாதிரி பந்து வீச வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் அடித்துதான் ஆடப்போகிறார்கள்.

எங்களுடைய பேட்டிங்கில் இன்னும் 10 ரன்கள் அடித்து இருக்க வேண்டுமா என்றால், எங்களது பந்துவீச்சு இன்னும் எக்ஸ்போஸ் ஆகவில்லை. எனவே நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாகத்தான் செயல்பட்டு ஆகவேண்டும்

ஆடுகளத்தில் பந்து திரும்பியது. பந்தில் தையல் ஆடுகளத்தில் மோதிய பொழுது சிறிய திருப்பம் ஏற்பட்டது. மேலும் அங்கு கொஞ்சம் கிரிப் கிடைத்தது.

200 ரன்கள் சரியாக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் நாங்கள் இரண்டு மோசமான ஓவர்களை வீசி விட்டோம். பதிரனா நன்றாகப் பந்து வீசினார். இதைத் தாண்டி திட்டங்கள் தவறாக இருந்ததா அல்லது அதை செயல்படுத்துதல் தவறாக இருந்ததா என்று நாங்கள் பார்க்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!