இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு; நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் காயம்!

0
1370
ICT

சில வாரங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது!

இதற்கு அடுத்து உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த டி20 தொடரின் போது, முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் சரியாக குணமாகாத காரணத்தால் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் வெளியே அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -

இதையடுத்து பும்ரா தென் ஆப்ரிக்கா அணியுடனான தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவர் நேஷனல் கிரிகெட் அகடமி அமைப்பின் கண்காணிப்பின் கீழ் சென்றார். அங்கு பரிசோதிக்கப்பட்ட அவர் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. இந்த அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது சமி இருக்க அதிக வாய்ப்பு உண்டு. அவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால், நிலைமை கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது.

இந்த நிலையில் ஸ்டேண்ட் பை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளதில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகரும் ஒருவர். தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஆனால் இவர் முதல் போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

தற்போது பிடிஐ செய்தி குறிப்பில் தீபக் சஹர் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது நாள் போட்டிகளை தவற விடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தீபக் சகருக்கு ஏற்பட்டுள்ள காயம் மிகவும் கவலைக்குரிய ஒன்று கிடையாது என்றும், அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்றும் கூறப்பட்டுள்ளது. அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க விரும்பினால் அவரை ஆஸ்திரேலியா அழைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் முகமது சமி பற்றி கூறும் பொழுது, அவர் வேகமாக தேறி வருகிறார் என்றும், அடுத்த வாரத்தில் உறுதியாக அவர் ஆஸ்திரேலியா பறப்பார் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திடீர் திடீரென்று வரும் வீரர்கள் பற்றியான காயச் செய்திகளும், அதற்கடுத்து அவர்கள் உலகக்கோப்பை தொடரில் இடம் பெற மாட்டார்கள் என்கின்ற அதிர்ச்சி செய்திகளும் தொடர்ந்து கொண்டே இருப்பதால், தீபக் சகருக்கு ஏற்பட்டுள்ள இந்தக் காயம் உண்மையில் எப்படியானது என்று ரசிகர்களுக்கு சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.