இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் குறித்து இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக திகழ்ந்த ரோகித் சர்மா நேற்று டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்கு முன்பாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி மோசமான தோல்விகளை சந்தித்ததை அடுத்து புதிய கேப்டனை பிசிசிஐ எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளிவர உடனடியாக ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கிய டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வெளிநாட்டு மண்ணில் விளையாட உள்ள போட்டி என்பதால் இந்திய அணி இதில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அடுத்த டெஸ்ட் கேப்டனாக சுப்மான் கில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறிவரும் நிலையில் அணில் கும்ப்ளே ஜஸ்பிரித் பும்ராவை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக நியமிப்பேன் என அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
என் கேப்டன் இவர்தான்
இதுகுறித்து அவர் கூறும்போது “ஒருவேளை என்னை பொருத்தவரை இந்த இங்கிலாந்து தொடருக்காக ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமித்து விளையாடலாம் என்று கூறுவேன். அதற்குப் பின்னர் அவரது உடல் தகுதி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஒரு வேகப்பந்து வீச்சாளராக இது எளிதான விஷயமாக இருக்காது என்று எனக்கு நன்றாக தெரியும், அவருக்கு காயங்கள் இருக்கிறது. மேலும் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் போதே ஓய்வில் இருந்தார் என்பதையும் அறிவேன்.
இதையும் படிங்க:என்னோட இந்த நிலைக்கு காரணமே சிஎஸ்கேதான்.. அந்த 2 பேர் இல்லனா நான் இல்ல – குஜராத் வீரர் சாய் கிஷோர்
இந்த ஐபிஎல் தொடர் மூலமாகவே மீண்டும் அவர் திரும்பி இருக்கிறார் ஆனால் வேறு வழி இல்லை. எனவே நான் நிச்சயமாக அவரைத்தான் கேப்டனாக நியமிப்பேன். மேலும் அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது சாத்தியம் இல்லாமல் இருக்கும் என்பதால் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் கில் வேண்டுமானால் கேப்டன் பொறுப்பை ஏற்கலாம்” என பேசி இருக்கிறார். பும்ராவின் தலைமையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.






