இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வுட் சமீபத்தில் தனது பதவியில் இருந்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இங்கிலாந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேடி வருகிறது. அந்தப் பதவிக்கு பல முன்னாள் வீரர்களின் பெயர் அடிபட்டு வரும் நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அன்ட்ரூ பிளின்டாஃபின் பெயரும் அடிபடுகிறது.
இங்கிலாந்து அணியில் அன்ட்ரூ பிளின்டாஃப்
இங்கிலாந்து அணியில் விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர்களில் மிகவும் முக்கியமானவர் அன்ட்ரூ பிளின்டாஃப். சுமார் 79 டெஸ்ட் போட்டிகள்,141 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் களமிறங்கி பேட்டிங் செய்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்காக சுமார் 259 இன்னிங்ஸ்களில் விளையாடி 8 சதங்கள் மற்றும் 44 அரை சதங்கள் உட்பட 7315 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் விகிதம் 31.39 ஆகும். இவருடைய பந்து வீச்சு மிக அற்புதமாக இருக்கும். சர்வதேச அளவில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
டுவிட்டர் வலைத்தளத்தில் உறுதிப்படுத்திய அன்ட்ரூ பிளின்டாஃப்
சமீபத்தில் கிறிஸ் சில்வர்வுட் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறியதை சுட்டிக்காட்டி , இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்கிற கேள்வியை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேமியன் மார்ட்டின் முன் வைத்தார்.
அந்த பதிவை மேற்கொள் காட்டி அன்ட்ரூ பிளின்டாஃப் நான் தயாராக இருக்கிறேன் என்ற பாணியில் பதிலளித்துள்ளார். இதன் மூலமாக அந்தப் பதவியை ஏற்பதற்கு அன்ட்ரூ பிளின்டாஃப் விருப்பம் தெரிவிப்பதாகவே நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
இங்கிலாந்து அணியில் பல போட்டிகளில் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மூலமாக வெற்றிகளை தேடி கொடுத்த அன்ட்ரூ பிளின்டாஃப், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பேற்றால் மிக சரியான முடிவாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.