அம்பதி ராயுடு மட்டும் கிடையாது; இந்த வருடம் ஓய்வை அறிவித்த இன்னும் 2 இந்திய வீரர்கள்!

0
9487
ICT

கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களின் ஃபார்ம் என்பது பரமபதம் விளையாட்டு போல. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான வெற்றி தோல்விகளை வீரர்கள் சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கிடையே அவர்களின் மனநிலையை நல்ல முறையிலும் பராமரிக்க வேண்டும்.

சில வீரர்களுக்கு ஆரம்ப வாய்ப்புகளுக்கு மேல் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சில வீரர்கள் திடீரென்று நடுவில் கழட்டி விடப்படுகிறார்கள். மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்வதா? அல்லது விலகுவதா? என்கின்ற குழப்பத்திலேயே சில வீரர்களுக்குக் காலங்கள் போய்விடுகிறது.

- Advertisement -

இந்த வகையில் இந்த ஆண்டில் தங்களது ஓய்வு முடிவை அறிவித்த, பலருக்குத் தெரிந்த மூன்று இந்திய வீரர்கள் பற்றி இந்தச் சிறிய தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்!

ஜோகிந்தர் சர்மா:

2007 டி20 உலகக் கோப்பையையும், அந்த உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இறுதி ஓவரை வீசிய இவரையும் நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

- Advertisement -

அதற்குப் பிறகு சிலகாலம் மட்டுமே இந்திய அணிக்கான வாய்ப்பில் இருந்த இவர் பிறகு காவல்துறையில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் இந்த வருடத்தில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார்.

முரளி விஜய்:

உலக பேட்ஸ்மேன்களில் மிகவும் ஸ்டைலிஷ் ஆன பேட்ஸ்மேன்களில் இவருக்கு தனி இடம் இருக்கும். அதேபோல் தமிழகத்தில் இருந்து இந்திய அணியில் விளையாட வாய்ப்பு பெற்ற சிறந்த பேட்ஸ்மேன்களில் இவருக்கு மிக முக்கிய இடம் இருக்கும். தற்பொழுது இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.

இவர் இந்திய அணிக்காக 61 டெஸ்ட், 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகள் விளையாடியிருக்கிறார். டெஸ்டில் 3982 ரன்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 339 ரன்கள், டி20 கிரிக்கெட்டில் 169 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 16 சதங்கள் மற்றும் 19 அரை சதங்கள் அடங்கும். தற்போது இவர் கிரிக்கெட் பயிற்சியாளராகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார்.

அம்பதி ராயுடு;

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டிருக்க வேண்டிய திறமை கொண்ட வீரர். ஆனால் துரதிஷ்டவசமாக இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை.

2019 ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் திடீரென்று நீக்கப்பட்டுஅப்பொழுதே தனது ஓய்வு முடிவை அறிவித்தவர். ஆனால் பிறகு முடிவை மாற்றிக் கொண்டு மாநில கிரிக்கெட் அணிகளுக்கு விளையாடினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இவர் ஐபிஎல் இறுதிப் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கோப்பையையும் வென்று சிறப்பான முறையில் ஓய்வையும் பெற்றிருக்கிறார்.

இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 55 போட்டிகளில் 1694 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் மூன்று சதங்கள் மற்றும் 10 அரை சதங்கள் அடங்கும். இவரது ரன் சராசரி 47.05. இதிலிருந்து இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது எவ்வளவு பெரிய துரதிஷ்டம் என்பது புரியும்!