ஐபிஎல் 2025

கருண் நாயர் உறுதியா இந்தியா டீம்ல இருப்பார்.. கம்பீர் விடமாட்டார் காரணம் இதுதான் – அம்பதி ராயுடு நம்பிக்கை

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக விளையாடிய கருண் நாயர் 40 பந்துகளில் அதிரடியாக 89 ரன்கள் குறித்து அனைவரது கவனத்தையும் திருப்பி இருக்கிறார். இதன் காரணமாக மீண்டும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என அம்பதி ராயுடு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

கருண் நாயர் கடைசியாக ஐபிஎல் தொடரில் அரை சதம் அடித்து ஏழு ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது கம்பேக் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அவருடைய பேட்டிங் அணுகுமுறை மற்றும் நம்பிக்கை அந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது. பும்ராவை அவர் அனாயசமாக விளையாடிய விதம் அவர் எந்த அளவுக்கு பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார் என்பதை காட்டியது.

863 ரன்கள் குவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் ஆறு சதங்களுடன் கருண் நாயர் 863 ரன்கள் குவித்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எல்லா பேட்ஸ்மேன்களும் 40 சராசரிக்கு மேல் இருப்பதால் கருண் நாயரை தேர்வு செய்ய முடியவில்லை என அஜித் அகர்கர் கூறியிருந்தார்.

மேலும் கருண் நாயர் கர்நாடக மாநில அணிக்கு விளையாடுவதில் இருந்து விலகி விதர்பா அணிக்கு விளையாட ஆரம்பித்திருக்கிறார். மேலும் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் நார்த்தாம்டன்ஸைர் அணிக்காக விளையாடி கொண்டு வருகிறார். மேலும் இந்த தொடரில் அவர் இந்த அணிக்காக இரட்டை சதம், சதங்கள் அடித்து இருக்கிறார். அடுத்து ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியில் நிச்சயம் இருப்பார்

இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “கருண் நாயர் வெளிப்படுத்தி இருப்பது சுத்தமான விடா முயற்சி. விஷயங்கள் சரியாக நடக்காத பொழுது நீங்கள் அதை எதிர்கொள்வது மிகவும் கடினமானது. நிறைய பேர் இப்படியான கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே அதில் இருந்து வெற்றிகரமாக வெளியில் வந்திருக்கிறார்கள். அதில் கருண் நாயரும் ஒருவர். ஏனென்றால் நீங்கள் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பில் இருந்து தொலைந்து விட்டால், மக்கள் உங்களை எளிதில் மறந்து விடுவார்கள்”

இதையும் படிங்க : அடுத்து என்ன சரோஜாதேவி சோப்பு டப்பாவா?.. பாகிஸ்தான் பிஎஸ்எல் பரிதாப நிலைமை.. ஆட்டநாயகன் விருது சுவாரசியம்

“கிரிக்கெட் வேகமாக நகரும் ஒரு விளையாட்டு. ஆனால் அப்போது அது இன்னும் வேகமாக நகர்ந்து இருக்கிறது. ஆனால் கருண் நாயர் மட்டும் நகரவில்லை. அவர் தொடர்ந்து கற்றுக் கொண்டு மிக கடினமாக உழைத்தார். தன்னால் மீண்டும் வர முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு இருந்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னால் வர முடியும் என்று நம்பினார். அவர் இங்கிலாந்துக்கு இந்திய அணியில் விமானத்தில் இருப்பார் என்று நம்புகிறேன், விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். கருண் நாயர் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விளையாடுகின்ற காரணத்தால், இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -
Published by

Recent Posts