இதெல்லாம் சாதாரணம் ;
விராட் கோலியும் பாபரும்… – வாசிம் அக்ரம்!

0
2929
Wasim Akram

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் பலரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பாக நடந்து வருகிறது!

தகுதி சுற்றில் இலங்கை அணியை நமீபியா வீழ்த்தியது, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் வீழ்த்தி வெளியே அனுப்பியது என்று ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பிரதான சுற்றில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அயர்லாந்து வீழ்த்தியது, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே வீழ்த்தியது என ஆச்சரியங்கள் தொடர்ந்தது. இதற்கு உச்சமாய் இந்த உலகக் கோப்பை தொடரை நடத்தி வரும் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் தற்போது வெளியேறியிருக்கிறது!

இப்படியான ஆச்சரியங்களில் ஒன்றாய் இந்த எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்க கூடிய வீரராகப் பலராலும் கணிக்கப்பட்ட பாபர் ஆஸம் இதுவரை நான்கு ஆட்டத்தில் ஒருமுறை கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை என்பதும், அதில் ஒரு கோல்டன் டக் இருப்பதும் நிகழ்ந்திருக்கிறது!

அதே சமயத்தில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி பாபரை விட அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர்கள் கருத்து கூறியிருக்க, விராட் கோலி நான்கு ஆட்டத்தில் இரட்டை இலக்கத்தை தாண்டி இருக்கிறார். அதில் மூன்று அரை சதங்கள். அந்த மூன்று அரை சதங்களிலும் ஆட்டம் இழக்காமல் இருந்திருக்கிறார். இதில் இரண்டு ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இப்படி இந்த உலகக் கோப்பைத் தொடர் பலரது கணிப்புகளையும் உடைத்து பல திருப்பங்களுடன் பரபரப்பாய் நடந்து வருகிறது.

- Advertisement -

தற்போதைய உலகக் கோப்பையில் பாபர் ஆஸம் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டனும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆளுமையாளருமான பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விராட் கோலி உடன் பாபரின் நிலையை வைத்து சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

இது பற்றி வாசிம் அக்ரம் கூறும் பொழுது
” இது வழக்கமானது. எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் நடக்கக்கூடியது. மிகச் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிக்கும் இது நடந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் இப்படியான நெருக்கடியில் இருந்தார். பேட்டிங் டச் மற்றும் ஆட்டத் தொடர்பே இல்லாமல் போனது. இந்தியாவில் அவரை பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்தார்கள் ” என்று கூறியவர்…

மேலும் தொடர்ந்து “பாபர் நாம் அறிந்த ஒரு தரமான பேட்ஸ்மேன். அவருக்குத் தேவை ஒரு நல்ல இன்னிங்ஸ். அனேகமாக அவர் தனக்குத்தானே அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கலாம். ஏனென்றால் கடந்த மூன்று நான்கு வருடங்களில் மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் நிறைய ரன்களை அடித்த பிறகு, தனக்கென அவர் அமைத்துக் கொண்ட தரநிலைக்காக, ஒரு விளையாட்டு வீரராக நாம் நம்முடனே போட்டியிட வேண்டி இருக்கிறது. இதுவும் ஒரு அழுத்தத்தை உண்டாக்கக் கூடியதுதான்” என்று தெரிவித்திருக்கிறார்!