கடந்த வாரம் கைவிடப்பட்ட 18 வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் திருவிழா திரும்பவும் வருகிற 17-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ மிக வேகமாக செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் பிசிசிஐ முதலில் போட்ட ஒப்பந்தத்தின்படி, வீரர்கள் அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் தென் ஆப்பிரிக்கா திரும்ப வேண்டும் என பேசி இருக்கிறார்.
நீட்டிக்கப்பட்ட ஐபிஎல்
கடந்த மார்ச் மாதத்தில் துவங்கப்பட்ட 18வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் திருவிழா இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதட்டம் காரணமாக 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள போட்டிகள் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது சிக்கல்கள் சீராகி சாதாரண நிலைமைக்கு திரும்பி இருக்கும் நிலையில் மீண்டும் போட்டிகள் வருகிற 14-ம் தேதி முதல் துவங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அனைத்து அணிகளிலும் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் பங்கு பெறுவதால் அவர்கள் அனைவரும் கலந்து கொள்வதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள் அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளதால், இந்த இரு நாட்டு வீரர்களும் முழு தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாகி இருக்கிறது. முதலில் துவங்கப்பட்ட ஐபிஎல் மே 25ஆம் தேதிக்குள் முடிவடையும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர்பதட்டம் காரணமாக ஜூன் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ட்ராட் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் மே 26ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என கட்டளை விடுத்திருக்கிறார்.
முன்பே போடப்பட்ட ஒப்பந்தம்
இதுகுறித்து அவர் கூறும் போது “ஐபிஎல் மற்றும் பிசிசிஐ உடனான ஒப்பந்தம் என்னவென்றால், மே 25ஆம் தேதி திட்டமிட்ட இறுதிப்போட்டிக்குப் பிறகு மே 26 ஆம் தேதி அனைவரும் நாடு திரும்புவார்கள் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. எங்கள் பார்வையில் இருந்து இது எதுவும் மாறவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் உரையாடல் இதுதான். எனவே எங்கள் வீரர்கள் அனைவரும் வருகிற 26ஆம் தேதி நாடு திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இந்தியாவில் சச்சினுக்கு பிறகு.. இதை செய்தது விராட் கோலிதான்.. அவர் இல்லாதது பேரிழப்பு – இங்கி மொயின் அலி பேட்டி
இந்த ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் என்று எடுத்துக் கொண்டால், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கல்டன், குஜராத் அணியில் ககிஷோ ரபாடா, லக்னோ அணியில் எய்டன் மார்க்ரம், டெல்லி அணியில் ஸ்டெப்ஸ், பஞ்சாப் அணியில் மார்கோ ஜான்சன் மற்றும் பெங்களூர் அணியில் லுங்கி இங்கிடி ஆகியோர் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.






