50 ரன்னில் ஆல் அவுட்.. ஆர்சிபி சாதனை தப்பியது.. நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அபார வெற்றி!

0
1174
MLC2023

உலகெங்கும் டி20 கிரிக்கெட் பரவி வர, இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரின் வெற்றி உலகெங்கும் கிரிக்கெட் வாரியங்களை டி20 தொடர்களை நடத்துவதற்கு தூண்டுகோலாக இருக்கிறது!

இதற்கு தற்பொழுது அமெரிக்காவும் விதிவிலக்காக இல்லை. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஆறு அணிகளை வைத்து மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நான்கு அணிகளை ஐபிஎல் தொடரின் அணி உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இன்று இந்திய நேரப்படி காலையில் நடந்த முதல் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருந்தது. இரண்டாவது போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்ட் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தார். அந்த அணிக்கு நிக்கோலஸ் பூரன் 37 பந்தில் 38 ரன், டிம் டேவிட் 21 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 48 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன் நியூயார்க் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று விளையாடும் உன்முகுன்த் சந்த் மட்டுமே 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். மற்ற யாருமே இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை. அவர் இதில் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.

- Advertisement -

லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் மார்ட்டின் கப்தில், ரைலி ரூசோவ், ஆண்ட்ரே ரசல் மற்றும் கேப்டன் சுனில் நரைன் என எல்லோரும் ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் ஏமாற்றினார்கள். இதன் காரணமாக இந்த அணி 13.5 ஓவரில் 50 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சி அளித்தது. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி தரப்பில் பந்து வீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடரில் 2017 ஆம் ஆண்டு சீசனில் 27 வது போட்டியாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே நடந்த போட்டியில், 132 ரன்கள் இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 49 ரன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுருட்டியது. இதுவே ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். தற்பொழுது நைட் ரைடர்ஸ் அணியே அமெரிக்க டி20 லீக்கில் 50 ரன்களுக்கு சுருண்டு இருக்கிறது. ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பித்திருக்கிறது ஆர்சிபி அணியின் மோசமான சாதனை!