இவங்க ரெண்டு பேரால தான் ஆசியகோப்பையை தோத்தோம் – முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி சாடல்!

0
750

ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் இவர்கள் இருவரும் தான் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணியாக நடப்புச் சாம்பியன் இந்திய அணி பார்க்கப்பட்டது. லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரண்டு அணிகளிடம் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள். வேகபந்துவீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணி மிகவும் பின்தங்கி இருந்தது. முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தாதது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

- Advertisement -

ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா போன்ற வீரர்களின் தேர்வு மிகவும் சொதப்பலாக இருந்தது. உரிய முறையில் அவர்களை பயன்படுத்தவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்திய அணியின் 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதை குறிப்பிட்டு, ராகுல் டிராவிட் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும், அர்ஷதிப் சிங் மற்றும் ஆவேஷ் கான் போன்ற இளம்வீரர்கள் இந்திய அணியில் எடுக்கப்பட்டனர். அவர்களை உரிய முறையில் ரோகித் சர்மா பயன்படுத்தவில்லை என்கிற கடும் விமர்சனத்தை முன்வைத்த இந்திய அணியின் முன்னாள் தேர்வுகுழு தலைவர் திலீப் வெங்சர்க்கார், ராகுல் டிராவிட் இந்த தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

“இந்திய அணியில் வீரர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பதே மிகவும் குழப்பமாக இருக்கிறது. முதலில் தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்தினார்கள். அவர் பேட்டிங் செய்யவில்லை. ஆனால் அடுத்த போட்டியில் அவரை வெளியில் அமர்த்திவிட்டு ரிஷப் பண்ட் உள்ளே எடுத்து வந்திருக்கிறார்கள். அஸ்வின் போன்ற அனுபவமிக்க வீரர்களை வெளியில் அமர்த்திவிட்டார்கள். கடைசி மற்றும் முக்கியமற்ற போட்டியில் அவரை உள்ளே எடுத்து வந்தார்கள். யாருக்கு எந்த வரிசையில் எப்போது ஓவர் கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் நிலவியது தெளிவாகப் தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் வரிசையில் பரிசோதனை மேற்கொள்வது தவறில்லை. இருதரத்து தொடர்களில் அப்படி பரிசோதனை செய்தால் சரியானதாக இருந்திருக்கும். ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இப்படி மேற்கொள்வது மிகப்பெரிய முட்டாள்தனம். இந்த தொடரை இந்திய அணி நிச்சயம் வென்றிருக்க வேண்டும்.

- Advertisement -

இந்திய அணி பெற்ற தோல்விக்கு ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். டி20 உலக கோப்பை முன்பாக இந்திய அணி இந்த ஆசிய கோப்பையை வென்றிருந்தால் மிகப்பெரிய அனுபவம் மற்றும் பலத்துடன் உள்ளே நுழைந்திருக்கும். தற்போது வீரர்கள் மனநிலை சற்று சுணக்கமாக காணப்படுகிறது. உற்சாகமூட்டும் வகையில் இந்திய அணி நிர்வாகம் சில முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும். உலக கோப்பை இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. கடந்த 10 வருடங்களாக ஐசிசி நடத்தும் எந்த ஒரு தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை.” என்றார்.