இந்திய அணி அடுத்து இங்கிலாந்து சென்று விளையாட இருக்கும் டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி ஐபிஎல் தொடரை தியாகம் செய்துவிட்டு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்வார் என்று யாரும் கனவு காண வேண்டாம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் முடிந்து அதற்கு அடுத்து இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு அடுத்து கிரிக்கெட் உலகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் டெஸ்ட் தொடராக இது அமைந்திருக்கிறது.
பரவிய பொய்யான செய்தி
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் திரும்பி வருவதற்காக விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்பாக இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவார் என்கின்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. ஆனால் இங்கிலாந்து உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் கவுன்டி தொடர் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே நடைபெற்று முடிகிறது. இந்த நிலையில் விராட் கோலி ஐபிஎல் தொடரை தியாகம் செய்வார் என்று நினைக்க வேண்டாம் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தயாராக ஐபிஎல் தொடரில் விளையாடாமல் விராட் கோலி இங்கிலாந்து கவுன்டி தொடரில் விளையாடுவார் என்கின்ற ஒரு செய்தி வந்தது. இப்படி ஒரு செய்தி வந்ததும் கீபோர்டு வீரர்கள் உடனடியாக இது உறுதியான செய்தி என்பது போல பரப்ப ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த போட்டி தொடர்கள் எப்போது நடக்கின்றன? என்பதை பாருங்கள்”
விராட் கோலியால் இதை மட்டுமே செய்ய முடியும்
“இந்தியாவில் ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டி முடிவடையும் பொழுது இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டின் எட்டு சுற்று போட்டிகள் நடைபெற்ற முடிந்து இருக்கும். எனவே யாராவது விராட் கோலி ஐபிஎல் தொடரை விட்டு இங்கிலாந்து சென்று விளையாடுவார் என்று நினைத்தால் உறக்கத்திலிருந்து எழுந்து விடுங்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது”
இதையும் படிங்க : ரோகித் கிடையாது.. இப்போது உலகின் நம்பர் 1 கேப்டன் இவர்தான் – தினேஷ் கார்த்திக் தேர்வு
“மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெறும் பொழுது, உள்நாட்டு ரஞ்சி தொடரின் இரண்டாம் சுற்று போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவதற்கு இடம் இருக்கிறது. இவர்கள் இருவரும் இதை வேண்டுமானால் செய்ய முடியும்” என்று கூறியிருக்கிறார்.