இன்று இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடங்கியது. இதில் கேரளா அணிக்காக தேர்வு செய்யப்படாத சஞ்சு சாம்சன் குறித்து ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு மிகப்பெரிய தொடராக விஜய் ஹசாரே டிராபி இருந்து வருகிறது. இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடிப்பதற்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக இந்திய கிரிக்கெட்டில் கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் இந்த தொடரில் விளையாடாதது விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.
கேரள கிரிக்கெட் வாரியம் தந்த விளக்கம்
நடப்பு விஜய் ஹசாரே டிராபியில் கேரள அணிக்காக சஞ்சு சாம்சனை ஏன் தேர்வு செய்யவில்லை என்பது குறித்து கேரள கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து இருந்தது. அதில் வயநாட்டில் நடந்த பயிற்சி முகாமில் சஞ்சு சாம்சன் கலந்து கொள்ளவில்லை எனவும், இதன் காரணமாகவே அவரை தேர்வு செய்யவில்லை எனவும் விளக்கம் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனின் சமூக வலைதள ரசிகர் பக்கங்கள் சில அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் இந்த தொடரில் விளையாடவில்லை எனவும் கூறுகின்றன. ஆனால் இதில் இன்னும் உண்மை நிலை என்னவென்று வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் விளையாடி இருக்க வேண்டும்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “விஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியில் சஞ்சு சாம்சன் பெயர் இல்லை என்பதை முதலில் பேசலாம். அவர் வயநாட்டில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு செல்லவில்லை அதனால் அவரை தேர்வு செய்யவில்லை என கேரள கிரிக்கெட் வாரியம் காரணம் சொல்லி இருந்தது. அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்து கொள்ளவில்லை என அவருடைய ரசிகர் பக்கங்கள் சில கூறின”
இதையும் படிங்க : இந்தியா 4வது டெஸ்ட்.. 96 வருட சாதனையை.. உடைக்கப் போகும் 19 வயது ஆஸி வீரர்.. பிராட்மேன் காலத்து ரெக்கார்டு காலி
“தற்போது கேரள கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யவில்லை. ஆனால் அவர் இந்த தொடரில் விளையாடுவது முக்கியம். இதில் விளையாடி நிரூபித்தால் தான் அவர் சாம்பியன்ஷிப் தொடருக்கு தேர்வு ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும் ரிஷப் பண்ட் இந்திய ஒருநாள் அணியில் தன்னுடைய இடத்தை இன்னும் உறுதி செய்யவில்லை. இப்படி இருக்கும் பொழுது சஞ்சு சாம்சன் கட்டாயம் இந்த தொடரில் விளையாடியிருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






