இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களது இடங்களை நிரப்ப போகும் சரியான வீரர்கள் யார்? என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.
தற்போது இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஓய்வை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக அணிக்கு பயிற்சியாளராக வரக்கூடியவர்கள் புதிய அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள். மிகக் குறிப்பாக சாம்பியன் வீரர்களுக்கான மாற்று வீரர்களை கொண்டு வருகின்ற முக்கியமான வேலையில் ஈடுபட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “கேஎல்.ராகுல் அனைவரையும் விட மூத்தவர். எனவே அவரை நாம் தொடக்க இடத்தில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இருந்தபோதிலும் அவர் ஓய்வு பெற்ற பிறகு தொடக்க ஆட்டக்காரரின் இடம் காலியாகி விடும். மேலும் விராட் கோலி ஓய்வு பெற்றவுடன் நான்காவது இடமும் காலியாகி விடும். இந்த இடத்தில் நான் தமிழக வீரர் சாய் சுதர்சன் பற்றி யோசிக்கிறேன்”
“என் நினைவுக்கு வரும் ஒரு முக்கிய இளம் வீரர், அவருக்காக நாம் தயாராக இருக்க வேண்டும், அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம். அது சாய் சுதர்சன். இதைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் இருக்கிறார் அடுத்து நாம் கில்லை நான்காவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும். மேலும் தொடர்ந்து ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்தில் வருவார். இந்த மூவரும் பெரிய தூண்களாக இருப்பார்கள்”
சாய் சுதர்சனுக்கு இதுவெல்லாம் இருக்கிறது
“அவர் விளையாடும் முறை மற்றும் அவரது மனோபாவத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது அவருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நீங்கள் பெரிய மேடையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும்போதெல்லாம் அவர் அதற்கானவர் என நிரூபித்திருக்கிறார். அது ஐபிஎல் இறுதிப் போட்டியாக இருந்தாலும் கூட எளிதாக விளையாடியிருக்கிறார்”
இதையும் படிங்க : ஏன் அந்த பொய்ய பரப்பிக்கிட்டே இருக்கிங்க?.. ஆனாலும் சிரிச்சிட்டேன் – பும்ரா சூசகமான விமர்சனம்
“நீங்கள் அவரை தென் ஆப்பிரிக்காவுக்கு கூட்டிச் சென்ற பொழுது அவர் அங்கு மிகவும் எளிதாக விளையாடினார். அவர் இதுவரை விளையாடி உள்ள வெள்ளைப் பந்து போட்டிகளில் இருந்து அவரது திறமையை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது அவருக்கு 23 வயதுதான் ஆகிறது. எனவே நான் அவர் மீது நிச்சயம் முதலீடு செய்வேன்” என்று கூறி இருக்கிறார்.






