3 போட்டி 39 ரன்.. டி20 உலக கோப்பைக்கு ஜெய்ஸ்வாலை தேர்வு செய்ய வேண்டுமா? – இந்திய முன்னாள் வீரர் கருத்து

0
39
Jaiswal

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் இன்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலை டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்வது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக, அதிக ரன் யார் அடிப்பார்கள் என்கின்ற கணிப்பில் நிறைய முன்னாள் வீரர்கள் ஜெய்ஸ்வால் பெயரை கூறியிருந்தார்கள். நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருடைய பேட்டிங் செயல்பாடு அபாரமாக இருந்தது. இதன் காரணமாக அவருக்கு இந்த வருடம் ஐபிஎல் தொடர் மிகச் சிறப்பானதாக அமையும் என்று பலரும் கணித்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் முதல் மூன்று போட்டிகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இந்த மூன்று போட்டிகளிலும் அவருடைய பேட்டிங்கில் தடுமாற்றம் தெரியவில்லை. சீக்கிரத்தில் விக்கெட்டை கொடுத்து இருந்தாலும் அவர் அடித்த பவுண்டரிகள் மிகச் சிறப்பான டச்சில் இருந்தது. அவரது ஆட்ட அணுகுமுறை மிக அதிரடியாக இருந்த காரணத்தினால் ஷாட் செலக்சன் மட்டுமே தவறாக இருந்தது.அவர் கொஞ்சம் நேரம் கொடுக்க நினைத்தால் போதும் எல்லாம் மாறிவிடும்.

மேலும் ஜூன் மாத ஆரம்பத்தில் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு அணிகளை கொடுப்பதற்கான கடைசி தேதி மே ஒன்றாம் தேதியாகும். அதற்குப் பின் மே 26 ஆம் தேதி வரையில் கொடுக்கப்பட்ட அணியில் நாம் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த நிலையில் ஏப்ரல் கடைசி வாரத்தில் இந்தியத் தேர்வுக்குழு டி20 உலகக் கோப்பை இந்திய அணியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஜெயஸ்வாலுக்கான வாய்ப்பு பற்றி பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் ஐபிஎல் தொடரில் ரன்கள் அடிக்காமல் இருக்க போவது கிடையாது. மேலும் நாம் ஐபிஎல் தொடரின் 5 அல்லது 7 போட்டிகளை வைத்து அவரை டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப் போவதும் கிடையாது. ஒருவேளை அப்படித்தான் தேர்வு செய்வோம் என்றால் அது மிகவும் கேலிக்குரியதாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க: ஹர்திக்கை யாரும் திட்டாதிங்க.. முடிவெடுத்தது அவர் இல்ல – மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டிக்கு முன் கங்குலி பேச்சு

ஜெய்ஸ்வால் இந்திய டி20 அணியில் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் இரண்டு மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. ஆனால் ஆர்சிபி அணிக்கு எதிராக நடக்க இருக்கும் போட்டி குறித்தான மதிப்பாய்வில், அவர் எவ்வளவு சிறப்பான முறையில் கடந்த காலத்தில் பேட்டிங் செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அவருடைய பெயர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் நிச்சயமாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.