இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்று சிறப்பாக ஆரம்பித்தார்கள். தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பின்தங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் பற்றி ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தின் ஆடுகளும் முழுக்க முழுக்க சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. இலங்கையணி ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டும் வைத்து விளையாடும் அளவுக்கு சுழல் பந்துவீச்சு சாதகம் இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு இந்திய அணியை கட்டுப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திய அணியில் இருக்கும் உலக தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் எதிர்பார்ப்புக்கு தக்கபடி இன்னும் பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. இலங்கை மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் வான்டர்சே ஆறு விக்கெட் கைப்பற்றிய நிலையில் குல்தீப் யாதவ் கடந்த போட்டியில் இரண்டு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
மேலும் இந்திய அணிக்கு புதிய துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கும் சுப்மன் கில் இந்த தொடர் முழுக்கவே சுமாரான பேட்டிங்கையே வெளிப்படுத்தி வருகிறார். அவரை மூன்று ஃபார்மட் வீரர் என இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியிருந்தார். மேலும் அவரையே எதிர்காலத்திற்கான மூன்று வடிவத்திற்குமான இந்திய கேப்டனாக பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “இது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மெதுவான ஆடுகளம் என்று கூறுகிறோம். ஆனால் குல்தீப் யாதவுக்கு பெரிய உதவிகள் ஏதும் இங்கு கிடைக்கவில்லை.அவர் விக்கெட்டுகள் எடுத்தார். ஜனித் லியாங்கே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் அதே ஆடுகளத்தில் ஜெஃப்ரி வான்டர்சே ஆறு விக்கெட் கைப்பற்றினார். அவரும் ஒரு மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர். இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் என்று நினைக்கிறோம், அதற்கு தகுந்தபடி அவர் செயல்படவில்லை.
இதையும் படிங்க : 3வது போட்டி டை-யானால் சூப்பர் ஓவர் இருக்குமா?.. 2023 புதிய விதி – இலங்கை கிரிக்கெட் அதிகாரி தகவல்
மேலும் இந்தத் தொடரில் சுப்மன் கில் ஆதிக்கம் செலுத்தி விளையாடவில்லை. அவருக்கு இங்கு ரன்கள் இருக்கிறது என்று நினைக்கிறார். மேலும் 80 முதல் 100 ரன்கள் அடிக்க முடியும், பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும் என்றும் நம்புகிறார். ஆனால் அதை எதையும் செயல்படுத்த முடியாமல் அவர் ஆட்டம் இழந்து வெளியேறி வருகிறார்” என்று கூறி இருக்கிறார்.