வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 86-வது சர்வதேச சதமடித்து அசத்திய விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜின்க்யா ரஹானே தனது பாராட்டுதலையும் கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த அபாரமான பேட்டிங் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ஒருநாள் ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியின் இலக்கு மற்றும் மனநிலை குறித்து அஜின்க்யா ரஹானே பேசியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி எட்டுவது குறித்த முக்கிய பார்வையை அவர் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அஜின்க்யா ரஹானே பேசும்போது “விராட் கோலி தனக்குத்தானே அதிக அழுத்தத்தைக் கொடுத்துக் கொள்ளும்போது தான் மிகச் சிறப்பாகச் செயல்படுவார். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அவர் அதைச் செய்துள்ளார். அவருக்குத் தன் மீதே அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன, அதனால் தான் இத்தனை ஆண்டுகளாக அவராால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடிகிறது. விராட்டைப் பற்றி அறிந்த வரையில், அவர் 100 சதங்களைப் பற்றி யோசித்தால் அதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் அவருடைய முன்மாதிரி சச்சின் டெண்டுல்கர் தான். எனவே அவர் நிச்சயம் அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். அப்படி அவர் நினைத்தால், விராட் கோலியால் மட்டுமே அதைச் சாதிக்க முடியும்,” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “பல நேரங்களில் ஒரு வீரர் மைல்கல் சாதனைகளைப் பற்றி யோசித்தால் அவர் சுயநலவாதி என்று நாம் நினைக்கிறோம். ஆனால் விராட் கோலி தனக்குத்தானே அழுத்தம் கொடுத்துக் கொள்ளும்போது தான் சிறப்பாகச் செயல்படுகிறார். எனவே அவரது மனதில் நிச்சயம் ஒரு எண்ணிக்கை இருக்கும். அதே நேரத்தில் தான் விளையாடும் வரை ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் இருக்கும்,” என்று கூறி முடித்துள்ளார்.






