சன் ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு; கோப்பையை பெற்றுக்கொடுத்தவருக்கு வாய்ப்பு!

0
605

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்துவந்த கேன் வில்லியம்சன், டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக அணியிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டார்.

- Advertisement -

கடந்த வருடம் வில்லியம்சன் இருந்த ஃபார்ம் மற்றும் அவர் தலைமையில் அணியின் செயல்பாடுகள் எதுவும் திருப்தி அளிக்கவில்லை. ஆகையால் இத்தகைய முடிவினை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுக்க நேரிட்டது.

2022 சீசனின் கடைசி கட்டத்தில் வில்லியம்சன் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியதால், புவனேஸ்வர் குமார் சில போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார். டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் ஐபிஎல் ஏலத்தில் மயங்க் அகர்வால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எடுக்கப்பட்டார்.

கேப்டன் பொறுப்பில் யார் இருப்பார்? என்பது குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் புவனேஸ்வர் குமார், மார்க்ரம், மயங்க் அகர்வால் ஆகிய மூவருக்கும் இடையே யார் கேப்டனாக வருவார்கள் என்ற கணிப்புகளை பலரும் வெளிப்படுத்தி வந்தனர்.

- Advertisement -

இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 லீகில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்கள் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் எனும் அணியை வாங்கி இருந்தனர். அந்த அணியிலும் மார்க்ரம் இடம்பெற்று கேப்டனாக அணியை வழி நடத்தினார்.

நடந்து முடிந்த முதல் சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கோப்பையை வென்றது. மேலும் எய்டன் மார்க்ரம் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் நன்றாக செயல்பட்டு தொடர்நாயகன் விருதை பெற்றார். இதனால் மார்க்ரம் மீது சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் தற்போது ஐபிஎல் இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

மார்க்ரம், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 2.6 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்கு எடுக்கப்பட்டார். கடந்த 2022 சீசனில் 12 போட்டிகள் விளையாடி 381 ரன்கள் அடித்தார். இவரது ஸ்டிரைக் ரேட் கிட்டத்தட்ட 140 ஆகும். இவரது சராசரி கிட்டத்தட்ட 48 ஆகும்.

தென் ஆப்பிரிக்கா டி20 லீகில் கேப்டனாக செயல்பட்டு அணியை வழி நடத்தியது மிகச் சிறப்பாக இருந்தது. இம்முறை ஐபிஎல் போட்டியில் எப்படி வழி நடத்துவார்? என்கிற எதிர்பார்ப்பும் இவர் மீது கூடியிருக்கிறது.