462 ரன்.. 8 விக்கெட்.. இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் எதிரா கலக்கல் ஆட்டம்.. ஆர்சிபி வீரர் சதம்

0
1978

வெகு நாட்களுக்கு பின் இந்திய ஏ அணி மீண்டும் சுற்றுப்பயணம் செய்ய தொடங்கியுள்ளது. அண்மையில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடியது. இந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 2 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில் 2 நாட்கள் கொண்ட முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி கேப்டன் ஜோஷ் பொஹானன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் ஜென்னிங்ஸ் – லீஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஜென்னிங்ஸ் 25 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இளம் வீரர் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் லீஸ் 35 ரன்களில் போல்டாகி வெளியேற, தொடர்ந்து கேப்டன் பொஹானன் 8 ரன்களிலும், ஆலிவர் பிரைஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து லயன்ஸ் அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜேம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ராபின்சன் – மவுஸ்லி கூட்டணி இணைந்தது.

6வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், ராபின்சன் 45 ரன்களிலும், தொடர்ந்து ஜேம்ஸ் கூல்ஸ் 5 ரன்களிலும், மவுஸ்லி 60 ரன்களிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர். மொத்தமாக இங்கிலாந்து லயன்ஸ் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய ஏ அணி தரப்பில் மானவ் சுதார் 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ்தீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் – ரஜத் பட்டிதர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிறப்பாக ஆடிய நிலையில், ஈஸ்வரன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் சர்ஃபராஸ் கான் – ரஜத் பட்டிதர் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தது.

- Advertisement -

சிறப்பாக ஆடிய ரஜத் பட்டிதர் சதம் விளாசி அசத்த, இன்னொரு பக்கம் சர்ஃபராஸ் கான் அரைசதம் கடந்தார். தொடர்ந்து ரஜத் பட்டிதர் 111 ரன்களில் ஆட்டமிழந்த சூழலில், சர்ஃபராஸ் கான் 96 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் வந்த ஸ்ரீகர் பரத் 64 ரன்களிலும், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட துருவ் ஜுரெல் 50 ரன்களும் சேர்த்தனர்.

இறுதியாக இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 462 ரன்களை சேர்த்த போது, ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் கடைசி வரை களம் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2 நாட்கள் கொண்ட போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.