மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்; இங்கிலாந்தில் நடக்கிறது?!

0
356
Ind vs Pak

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தது கடைசியாக இருந்தது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்கள் நாட்டில் தங்களுக்குள் விளையாடி கொள்ளவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் இரு நாடுகளையும் கிரிக்கெட் போட்டிகளில் நேரடியாக சந்திக்க அனுமதிக்கவில்லை.

தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 7 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் மார்ட்டின் டார்லோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வைத்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து பேசியதாக டெலிகிராஃப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மற்ற நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடினாலும் அவர்களுக்கு அதனால் பெரிய வருமானம் கிடைப்பதில்லை. இந்தியாவுடன் விளையாடினால் நிறைய வருமானம் கிடைக்கும். தற்போது இந்த வருமானம் இல்லாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் போட்டியில் வரும் வருமானத்தை விட, இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் இந்திய அணியுடன் மோதும் போட்டியில் தான் அதிக வருமானம் அவர்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு பெரிய கிரிக்கெட் நாடுகள் எதுவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் என்று கூறி பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்தனர். இந்தச் சமயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் லார்ட்ஸ் மற்றும் ஹெட்டிங்லியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகளை தான் பங்களாதேஷ் உடன் விளையாட இருந்த போட்டியை தள்ளிவைத்துவிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தியது. ஆனால் இதில் எதிர்பார்த்த லாபம் யாருக்குமே கிடைக்கவில்லை.

ஆனால் இந்திய அணியுடன் நடத்தும் பொழுது நிச்சயமாக தொடர் மிகப்பெரிய வெற்றி பெறும். பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்துக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். லண்டன் மற்றும் பர்மிங்காம் நகரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பும் ரசிகர்களும் கூடுவார்கள். அதனால் மைதானங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், கொண்டு இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிகிறது. பேச்சுவார்த்தை வெற்றி பெற்று இரு அணிகளும் மீண்டும் விளையாடினால் மகிழ்ச்சியே!

- Advertisement -