இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஜிம்பாப்வே அணியின் தோல்வி குறித்து அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனால் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியின் தோல்வி குறித்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா கூறும்பொழுது “பிளஸ்சிங் முசர்பாணி இந்த தொடர் முழுவதிலும் நன்றாக பந்து வீசினார் என்று நினைக்கிறேன். பேட்டிங்கை பொறுத்த வரையில் நாங்கள் இன்னும் கீழே இருக்கிறோம். அதனால் முதலில் நாங்கள் அதை சரி செய்ய வேண்டும். மோசமான ஆட்டத்தை நாங்கள் இங்கும் அங்குமாக அவ்வப்போது வெளிப்படுத்துகிறோம்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் எங்களது பீல்டிங் இன்னமும் பின்னோக்கியுள்ளது. அது சரி செய்யக்கூடியது தான். ஆனால் அதற்காக நாங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இனி வரும் தொடர்களில் கவனத்தை செலுத்த போகிறோம். இந்தத் தொடரின் தொடக்கத்தில் ரிச்சி இங்குவாரா உடல்நிலை சரியில்லாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அவர் உடற்பகுதி பெற்றிருந்தால் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடி இருப்பார். அவர் பிட்டாக இருப்பது அணிக்கு ஒரு நல்ல விஷயம். அவருடைய தரம் என்ன என்பதை நாம் அறிவோம்.
ரிச்சி மற்றும் பிளஸ்சி ஆகியோர் அணியில் இருப்பது அற்புதமான விஷயம். நான் ஒவ்வொரு முறையும் பிரச்சனையில் இருக்கும் போது அணிக்காக அவர்கள் செய்யும் வேலையை பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எனது பணி சுமை நிர்வகிக்கப்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது அறுவை சிகிச்சைக்கு பிறகு நான் நான்கு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடியதில்லை.
இதையும் படிங்க:கில்லுக்கு இதுக்காகவே ஸ்பெஷல் நன்றி.. நானும் ரியான் பராக்கும் எப்பவோ பேசினது இப்ப நடந்தது – அபிஷேக் ஷர்மா பேட்டி
நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய தேவை உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் வீரர்களை மதிக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி எனது உடற்தகுதியை பரிசோதிக்க விரும்புகிறேன். நான் டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருக்கிறேன். ஆனால் அதேசமயம் நான் அதிகமாக நான்கு நாள் கிரிக்கெட்டில் விளையாடியது இல்லை. நான் இன்னும் சில தினங்களில் மான்செஸ்டர் சென்று நூறு பந்துகள் போட்டிகளில் விளையாட உள்ளேன். தற்போது அதில் கவனம் செலுத்த போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.