இந்தியாவில் 1000 நாட்களுக்கும் மேல் சதம் அடிக்காமல் இருந்தது எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது என உருக்கமாக பேசியுள்ளார் விராட் கோலி.
கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் சுப்மன் கில் 60 பந்துகளில் 70 ரன்களை அடித்து ஆட்டம் இழந்தார்.
ரோகித் சர்மா 67 பந்துகளில் 83 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக களம் இறங்கிய விராட் கோலிக்கு இந்த மைதானம் மிகவும் ஸ்பெஷல் ஆகும். ஏனெனில் 2019 ஆம் ஆண்டு கடைசியாக இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடிய போது சதம் அடித்திருந்தார்.
முதல் போட்டியில் களமிறங்கி விளையாடத் துவங்கிய முதல் பந்திலிருந்தே சிறப்பாக எதிர்கொண்ட விராத் கோலியிடம் முனைப்பு தெரிந்தது. அதை கடைசி வரை எடுத்துச் சென்று சதமாக மாற்றினார்.
ஒருநாள் போட்டிகளில் இவர் அடிக்கும் 45வது சதம் இதுவாகும். இந்தியாவில் சுமார் 1250 நாட்களுக்குப் பிறகு சதம் அடிக்கிறார். இந்த சதத்தின் மூலம் தனிப்பட்ட சாதனைகள், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்து பல புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
87 பந்துகளில் 113 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
1000 நாட்களாக சதம் அடிக்காதது குறித்து போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “இந்த ஆயிரம் நாட்கள் நான் சதம் அடிக்காமல் இருந்த போதும், இப்போதும் ஒரே மாதிரியாக பயிற்சி செய்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இத்தனை நாட்கள் சதம் அடிக்காமல் இருந்தபோது ஒன்று மட்டுமே கற்றுக் கொண்டேன். எந்த காரணத்தை கொண்டும் விரக்தி அடைந்து விடக்கூடாது. விரக்தி உங்களை எங்கேயும் எடுத்துச் செல்லாது. மனதில் எந்த ஒரு விஷயத்தையும் வைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம். மைதானத்திற்குள் சென்று எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் கற்றுக் கொண்டேன்.
எந்த ஒரு பதட்டமும் இன்றி இதுதான் எனது கடைசி போட்டி என்றவாறு நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை ஒன்றும் பல வருடங்கள் இருக்கப் போவதில்லை. இருக்கும் இந்த சில காலம் மற்றும் நேரங்களில் எனது பேட்டிங் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து நானும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்.” என்றார்.