45 வருட கமெண்ட்ரி வாழ்க்கையை விட்டு விலகுகிறேன் – திடீரென அறிவித்த ஜாம்பவான்!

0
112

45 வருடத்திற்கு பிறகு இந்த கமெண்ட்ரி வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் அறிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளருமான இயான் சேப்பல் 1977ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, வர்ணனையாளராக பொறுப்பேற்று அதனை சிறப்பாகவும் செய்து காட்டி இருக்கிறார். ஆஸி., அணிக்காக 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 5345 ரன்கள் அடித்திருக்கிறார். சில ஆண்டுகள் கேப்டன் பொறுப்பிலும் இருந்த சேப்பல், ஆஷஸ் தொடர் வெற்றிக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

- Advertisement -

சுமார் 45 வருடங்களுக்கு மேல் கமெண்ட்ரி செய்து வந்த சேப்பல், தனது 78 வது வயதில் வர்ணனைகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். “எனக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என நான் எண்ணிய தருணம் தற்போதும் நினைவில் இருக்கிறது. அன்று நான் நிறைய கிரிக்கெட் விளையாடியதாக உணர்ந்தேன். இன்றைய போட்டியை முடித்துவிட்டு மாலை நேரம் கடிகாரத்தை பார்க்கையில், 5 மணி 11 நிமிடங்கள் என காட்டியது. நான் விளையாடியது போதும். இனி செல்ல வேண்டும் என்று அப்போது யோசித்தேன். உடனடியாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எனது ஓய்வு முடிவை அறிவித்துவிட்டேன். அதன் பிறகு கமெண்ட்ரியில் எனக்கு ஆர்வம் இருந்தது. அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என எண்ணினேன்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஆஸ்திரேலியாவில் பிரபல ஊடக ஜாம்பவான் கெர்ரி பேக்கர் என்பவர் இரண்டு முறை என்னை கிரிக்கெட் வர்ணனையில் இருந்து நீக்க வேண்டும் என்று நினைத்தார். இவரது மகன் விளையாடிய விதத்தை மோசமாக வர்ணனை செய்தேன். உண்மையில் அவர் மோசமாக விளையாடினார். அதை நான் அப்படியே கூறிவிட்டேன். அதனால் என்மீது கோபம் கொண்டு என்னை அப்போதே வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்திருந்தார். எனது வர்ணனை அப்போதே நின்றிருக்கும். ஆனால் நான் தொடர்ந்து அமைதி காத்து வந்தேன். அதன் காரணமாக என்னால் இத்தனை ஆண்டு காலம் எனக்கு பிடித்த வேலையில் பங்களிப்பை கொடுக்க முடிந்தது. இந்த தருணத்தில் அதையும் நான் நினைவில் கொள்கிறேன்.” என்றார்.

இவரது காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகள் கொடிகட்டி பறந்தது. தற்போது டெஸ்ட் போட்டியின் மோகம் மிகவும் குறைந்து, கிட்டத்தட்ட இல்லை என்ற நிலைமைக்கு சென்றிருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்த அவர், “எனது வாழ்க்கை முடிவதற்குள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒருபோதும் முடிவடையாது. ஆனால் விளையாட யாரும் இருக்க மாட்டர். இன்றைய காலகட்டத்தில் பலரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி இருக்கையில் யார் தான் டெஸ்ட் போட்டிகளை விளையாட முன்வருவர். அதுதான் மிகப்பெரிய கேள்வி. டி20 மோகம் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு போட்டிகளின் மோகம் இருக்கும். ஆனால் பாரம்பரியத்தை ஒருபோதும் இழந்துவிட்டு புதியவற்றை நோக்கி செல்லுவதில் ஆரோக்கியம் இருக்காது. டெஸ்ட் போட்டிகள் உயிர்ப்போடு இருந்தால் மட்டுமே மொத்த கிரிக்கெட்டும் உயிர்போடு இருக்கும்.” என்று ஆணித்தனமாக கருத்தினையும் பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கும் மேலாக கமெண்ட்ரி செய்து வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் இருக்கிறது. திடீரென இவர் கமெண்ட்ரி வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என அறிவித்ததால் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும், கடைசி காலத்தில் ஓய்வு எடுக்க விரும்புங்கள் என்ற அறிவுரையும் வந்த வண்ணம் இருக்கின்றன.