சில ஆண்டுகளாக பேட்டிங் சரிவை சந்தித்து வரும் விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் தங்களுக்கு எதிராக செய்த ஒரு விஷயத்தை பின்பற்ற வேண்டும் என ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக விளையாடி சொற்ப ரன்னில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் அவர் ஆட்டம் இழந்த நேரம் மிகப்பெரிய சரிவை உண்டாக்கியது.இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் அதே முறையில் வெளியேறினார்.
2004 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் சச்சின் வெளியில் செல்லும் பந்துகளை விளையாடச் சென்று தொடர்ந்து ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக அவரைச் சுற்றி நிறைய எதிர்மறையான கருத்துக்கள் உருவாக ஆரம்பித்தது.
இந்த நிலையில் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் வெளியில் செல்லும் ஒரு பந்தை கூட 170 ரன்கள் மேல் தாண்டும் வரையில் விளையாடவில்லை. குறிப்பாக அவர் அந்த போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வரையில் ஒரு கவர் டிரைவ் கூட அடிக்கவில்லை. அந்த போட்டியில் 436 பந்துகளை சந்தித்து 33 பவுண்டரிகள் உடன் 241 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றார். ஒரு பேட்ஸ்மேன் சரிவிலிருந்து மீட்டுக் கொள்வதற்கு என்ன செய்யலாம்? என்பதற்கு இது ஒரு பாடமாகவே இருந்து வருகிறது.
இது குறித்து விராட் கோலிக்கு அறிவுரை கூறியிருக்கும் கில்கிறிஸ்ட் கூறும்பொழுது ” ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய போர் என்பது,உங்களை நோக்கி பந்துவீச்சாளரிடம் இருந்து வருவதோ அல்லது எதிரணியின் திறமையிடமிருந்து வருவது கிடையாது. உங்கள் இரு காதுகளுக்கு இடையே கேட்கக்கூடிய சத்தம் உண்டாக்கும் சண்டைதான் பெரிய விஷயம். விராட் கோலி எந்த ஒரு தனிப்பட்ட உணர்வையும் துரத்திக் கொண்டு செல்கிறார் என்று நான் சொல்லவில்லை”
இதையும் படிங்க : ஹெட்கிட்ட நடந்ததை விட.. சிராஜ் மோசமா ஒரு தப்பு செய்றார்.. ஐசிசி எப்படி விட்டது? – மைக்கேல் கிளார்க் விமர்சனம்
“அதே சமயத்தில் சிட்னி மைதானத்தில் 2004 ஆம் ஆண்டு எங்களுக்கு எதிராக சச்சின் செய்ததை தற்பொழுது விராட் கோலி பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறேன். அப்பொழுது சச்சின் தனக்கு இப்படி சரியாகவே சொல்லிக் கொண்டார். அதாவது ‘ நான் வெளியில் செல்லும் எந்த பந்தயம் துரத்திக் கொண்டு செல்ல போவதில்லை. அவர்களாகவே என்னிடம் வரட்டும். பிறகு நான் விளையாடுகிறேன்’ என்று கூறிக்கொண்டார். நீங்கள் இந்த வகையில் பொறுமையாக இருந்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.