இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு குறித்து அந்நாட்டின் முன்னாள் கேப்டன் வசீம் அக்ரம் தனது கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளுமே மிக மோசமான நிலையில் இருப்பதால், அந்த அணியின் உள்ளூர் கிரிக்கெட் அமைப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வசீம் அக்ரம் பேசும்போது “இங்கிலாந்து தொடருக்கு முன்பே நாம் 0-3 என்ற கணக்கில் தோற்போம் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. நமது பேட்டிங் தடுமாறுகிறது, பந்துவீச்சு சராசரிக்கும் கீழே உள்ளது மற்றும் ஃபீல்டிங் அதைவிட மோசமாக இருக்கிறது. இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை வரும், பாகிஸ்தானின் முதல்தர உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு கடந்த சில ஆண்டுகளாக சீராக இல்லாமல் முற்றிலும் சீர்குலைந்து போய்விட்டது.” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய வசீம் அக்ரம் “ரசிகர்கள் அணி தோற்பதைப் பார்த்து எல்லாவற்றையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாம் ஏற்கனவே பலமுறை அதைச் செய்து பார்த்து விட்டோம், இப்போது அங்கு மாற்றுவதற்கு எதுவுமே மிச்சமில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.