இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் விஷயங்களை வெளியே கசிய விட்டதாக ஒரு குறிப்பிட்ட வீரரை கம்பீர் குற்றம் சாட்டி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி மிக மோசமாக விளையாடி தோற்றது. இந்த நேரத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் வீரர்களிடம் கோபமாக பேசினார் என செய்திகள் வெளியே வந்தது. இந்த செய்திகளை வெளியிட்டது ஒரு குறிப்பிட்ட வீரர் என கம்பீர் சந்தேகப்படுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அப்போது கம்பீர் பேசிய விஷயங்கள்
இது குறித்து செய்திகள் வெளியான பொழுது இதற்கு மறுப்பு தெரிவித்து பேசி இருந்த கம்பீர் கூறும் பொழுது “இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நேர்மையான மனிதர்கள் இருக்கும் வரையில், இந்திய கிரிக்கெட் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு வீரர் இருக்க வேண்டும் என்றால் அவர் சிறந்த முறையில் செயல்பட்டால் மட்டுமே இருக்க முடியும். இங்கு அனைவருக்கும் ஒரே குறிக்கோள் அது இந்திய அணியை சிறப்பாக கொண்டு செல்வது பற்றியதுதான்” என்று கூறியிருந்தார்.
மேலும் தோல்விக்கு அவர் வீரர்களிடம் கொஞ்சம் கடுமையாக பேசியதை அவர் சூசகமாகவே ஏற்றுக் கொண்டிருந்தார். வீரர்களிடம் நியாயமான முறையில் என்ன சொல்ல வேண்டுமோ அதைத்தான் கூறியதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கம்பீர் வீரர்களிடம் பேசிய விஷயங்கள் வெளியே வந்தது எப்படி? என சந்தேகங்கள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய கூட்டத்தில் கம்பீர் குற்றச்சாட்டு
இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்குபெற்ற கூட்டத்தில் பயிற்சியாளர் கம்பீர் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தான் டிரெஸ்ஸிங் ரூமில் பேசிய விஷயங்களை வெளியில் கசிய விட்டது இந்திய அணியின் வீரர் சர்பராஸ் கான்தான் என கம்பீர் குற்றம் சாட்டி இருக்கிறார் என்று செய்திகள் கூறுகிறது.
இதையும் படிங்க : ஆப்கானை பார்த்து திருந்துங்க.. இந்திய அணியை வெல்ல இவரை கொண்டு வாங்க – பாக் பசித் அலி வேண்டுகோள்
தற்போது இதற்கு சர்பராஸ் கான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு காயம் எனவே மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாட மாட்டார் என்கின்ற செய்திகள் மட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் பார்க்கும்பொழுது இதற்குள் ஏதோ விஷயம் இருப்பதாகவே தெரிவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.






