இந்திய இளம் வீரர்கள் சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் குறித்து இந்திய முன்னாள் சுழல் பந்துவீச்சு நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் முக்கியமான விஷயம் ஒன்றை பேசியிருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் விளையாடு வருகிறார்கள். அதே சமயத்தில் மிக உயர்வாக மதிப்பிடப்படும் இளம் வீரர்களான கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பெற்று விளையாடி வருகிறார்கள்.
2026 டி20 உலகக் கோப்பை
தற்பொழுது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. அதை நோக்கியே உலகக் கிரிக்கெட் நாடுகள் தங்களது திட்டங்களை அமைக்கும். இந்த வகையில் இந்திய t20 அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இந்த நால்வரில் யார் இடம் பெறுவார்கள்? என்பது தான் கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் டாப் ஆர்டர் முதல் மூன்று இடங்களில் கில் அபிஷேக் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெறுவதற்கான சூழல் அடுத்த ஆறு மாதங்களில் உருவாகும் என ஹர்பஜன் சிங் மிகவும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய மாநிலமான பஞ்சாப்பைச் சேர்ந்த கில் மற்றும் அபிஷேக் சர்மா குறித்தும் பேசியிருக்கிறார்.
இவர்கள் என்னை கேலி செய்வதில்லை
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது ” நான் பஞ்சாப் மாநில அணிக்கு கேப்டனாக இருந்த பொழுது கில் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரையும் பஞ்சாப் ரஞ்சி அணியில் சேர்க்க கேட்டுக் கொண்டேன். என்னுடைய தலைமையின் கீழ் இவர்கள் இருவரும் அறிமுகமானார்கள். தற்போது இவர்களது வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பஞ்சாபில் இருந்து வந்தவர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இவர்கள் இருவரும் என்னை கேலி செய்து பேச மாட்டார்கள். சீரியஸ் ஆக பேசுவார்கள். ஏனென்றால் என் மீது இருக்கும் மரியாதை காரணமாக இருக்கலாம்”
இதையும் படிங்க : இந்திய அணி இத செய்யலனா ஜெயிக்க முடியாது.. அந்த தத்துவத்தை ஃபாலோ பண்ணனும் – கம்பீர் பேட்டி
“தற்போதைய இந்திய டி20 அணி 2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இருக்கிறது. எங்களிடம் எதிரணியை உடைக்கக் கூடிய தரமான வீரர்கள் இருக்கிறார்கள். கில், அபிஷேக் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் மூவரும் டாப் ஆர்டரில் நிரந்தர வீரர்களாக இருக்கும் காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் இது அடுத்த ஆறு மாதங்களில் நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.