நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆர்சிபி அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணியிடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்திருந்த ஆர்சிபி அணிக்கு, நடப்பு ஐபிஎல் தொடரில் இது முதல் வெற்றியாக பதிவாகி இருக்கிறது.
நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 39 பந்துகளில் பொறுமையாக 45 ரன்கள் எடுத்தார். அடுத்து சராசரியாக 20 ரன்களுக்கு மேல் மற்ற பேட்ஸ்மேன்கள் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி இருவது ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் சேர்த்தது.
நேற்று ஆர்சிபியின் துவக்க வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் யாஸ் தயால் இவரது பந்துவீச்சும் மிகச் சிறப்பாக இருந்தது. சிராஜ் நான்கு ஓவர்களுக்கு 26 ரன் இரண்டு விக்கெட், யாஸ் தயால் நான்கு ஓவர்களுக்கு 23 ரன் இரண்டு விக்கெட் என கைப்பற்றினார்கள். நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக ஆரம்பத்தில் இவர்களது பந்துவீச்சே அமைந்தது.
இதற்கடுத்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன்கள் எல்லோரும் வெளியேற விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று விளையாடி 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டம் இழந்ததும் போட்டி பஞ்சாப் பக்கம் வந்தது. கடைசி நான்கு ஓவர்களுக்கு 47 ரன்கள் தேவை என்கின்ற நிலையில் ஜோடி சேர்த்த தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் லோம்ரர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்கள்.
இந்த போட்டி பற்றி பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் ” முதல் பாதியில் ஆர்சிபி அணியினர் மைதானத்தில் இருக்கும் பொழுது நான் சில அறிகுறிகளை பார்த்தேன். அவர்களிடம் மைதானத்தில் நல்ல அர்ப்பணிப்பு இருந்தது. மேலும் விராட் கோலி இந்த இரவு மிகச் சிறப்பாக விளையாடப் போகிறார் என்று தெரிந்தது. இது அவருடைய நாள் யாரும் அவர் குறுக்கே போக முடியாது என்று புரிந்தது.
இதையும் படிங்க : தவான் போல் தோற்றமளித்த ரசிகர்.. அடக்க முடியாமல் சிரித்த கோலி.. கலகலப்பான ஐபிஎல் மைதானம்
ஆனால் துரதிஷ்டவசமாக அவரால் பின் பாதியில் ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. நிச்சயம் அவர் இதுகுறித்து நேற்று இரவு ‘நாம் எப்படி ஆட்டம் இழந்தோம்? நம்மை நாமே கொஞ்சம் கடினமாக வைத்து விட்டோமா?’ என்பது குறித்து நிச்சயம் அனலைஸ் செய்வார். அவர் நேற்று ஆட்டத்தை முடிக்காததில் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார். அவர் ஒரு அற்புதமான வீரர். நேற்றைய போட்டியில் தன்னை சரியாக வைத்துக் கொண்டு, பெரிய ஷாட்கள் எதுவும் இல்லாமலே, சரியான ஷாட்கள் விளையாடி அற்புதமாக ஆட்டத்தை கொண்டு சென்றார்” என்று கூறி இருக்கிறார்.