என்ன பெரிய 50.. திலக் வர்மா விஷயத்தில் ஹர்திக் பாண்டியாக்கு ஆதரவாக குதித்த ஏபி டிவில்லியர்ஸ்!

0
2941
Abd

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்பொழுது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் பரபரப்பாக மாறியிருக்கிறது.

காரணம், இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் பெரிய சவால்களை கொடுக்கவில்லை. ஆனால் இதற்கு பதிலடியாக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தொடரில் நீடித்திருக்க வெற்றி பெற்றே ஆக வேண்டிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூரியகுமார் யாதவ் மற்றும் இளம் வீரர் திலக் வர்மா இருவரும் பொறுப்பை உணர்ந்தும் அதே நேரத்தில் அதிரடியாகவும் அமைத்த 87 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் போது இளம் வீரர் திலக் வர்மா தன்னுடைய மூன்றாவது சர்வதேச டி20 போட்டியில் இரண்டாவது அரை சதத்தை அடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்தார். அப்படி அடித்திருந்தால் அது ஒரு சாதனையாக பதிவாகி இருக்கும்.

இந்த நிலையில் அவருடன் அப்பொழுது இணைந்து விளையாடிக் கொண்டிருந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, திலக் வர்மாவின் அரை சதத்திற்கு ஒரு ரன் தேவைப்பட்ட பொழுது, உள்ளே புகுந்து சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

- Advertisement -

இது போட்டி முடிந்ததும் இந்திய ரசிகர்களிடையே பெரிய அதிருப்தியை உண்டாக்கியது. இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியாவுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள். சில முன்னாள் வீரர்கள் கூட இதற்கு கொஞ்சம் அதிருப்தி தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் பிரபல வர்ணனையாளர் ஹர்சா போக்லே
“திலக் வர்மா அரை சதத்தை தவறவிட்ட விவகாரத்தில் எழுந்த சர்ச்சையால் நான் குழப்பம் அடைகிறேன். டி20 கிரிக்கெட்டில் ஒரு சதத்தை தவிர மற்ற எதுவும் பெரிதான மைல்கல் கிடையாது. ஒரு குழு விளையாட்டில் நாம் தனிநபர் மீது வெறித்தனமாக இருக்கிறோம்.

டி20 கிரிக்கெட்டில் தனிப்பட்ட புள்ளி விபரங்களில் ஒருவர் அடிக்கும் 50 ரன்கள் எல்லாம் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்று நான் நம்பவில்லை. நீங்கள் போதுமான ரன்களை விரைவாக எடுத்து இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்!” என்று கூறியிருந்தார்.

தற்பொழுது ஏபி டிவிலியர்ஸ் அவரின் இந்த ட்வீடுக்கு மறு ட்வீட் செய்து ” நன்றி நன்றி நன்றி. இந்த விவகாரத்தைப் பற்றி இப்பொழுது ஒருவர் சரியாக பேசி விட்டார்!” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் ஹர்திக் பாண்டியா செய்ததை ஏபி டிவில்லியர்ஸ் ஆதரித்திருக்கிறார்!