சர்வதேச டி20 போட்டிகளில இருந்து ஓய்வு பெறுகிறார் ஆஸ்திரேலியா ஆரோன் பின்ச்.
கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமார் 12 வருடங்கள் ஆஸ்திரேலியா அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி வந்த ஆரோன் பின்ச், கடந்த 2021ஆம் ஆண்டு டி20 போட்டிகளின் கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டார்.
அதே 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரையும் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணிக்காக பெற்றுக் கொடுத்தார் ஆரோன் பின்ச். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 போட்டிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.
அதன் பிறகு டி20 உலகக்கோப்பை நடைபெற்றது. கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார். நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறியது.
36 வயதாகும் பின்ச், நடந்து முடிந்த பிக்பாஸ் லீகில் அபாரமாக விளையாடி 428 அடித்திருந்தார். நல்ல பார்மில் இருந்தவந்த பின்ச், திடீரென சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பின்ச் வெளியிட்ட அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு வரை நிச்சயம் டி20 அணியில் என்னால் தொடர முடியாது. எனது உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்காது என நினைக்கிறேன். ஆகையால் இளம் வீரர்கள் உள்ளே வருவதற்கு இதுதான் சரியான நேரம்.
அவர்களிடம் எனது இடத்தை கொடுத்துவிட்டு நான் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். புதிய கேப்டனை அணி நிர்வாகம் நியமித்து, அடுத்த உலகக்கோப்பைக்கு திட்டங்களை உருவாக்கி புதிய பாதையை வகுக்க சரியான நேரமும் இதுதான்.
இந்த 12 வருடங்கள் எனக்கு பல்வேறு நினைவுகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக 2015 உலகக்கோப்பை மற்றும் 2021 டி20 உலக கோப்பை இவை இரண்டையும் வென்றது என் வாழ்வில் மறக்க முடியாத, இறுதிவரை நினைவில் இருக்கக்கூடிய நிகழ்வுகள்.
இத்தனை வருடங்களில் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடியதில் என் வாழ்நாள் பெருமிதமாக கருதுகிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லை என்றால் எனது கிரிக்கெட் வாழ்க்கை சாத்தியமில்லாமல் போயிருக்கும். பல இக்கட்டான தருணங்களில் எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.” என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.